SBI MCLR Rate Hike,வட்டியை உயர்த்திய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா: இனி அதிக EMI செலுத்தணும் – sbi hikes mclr rates will your home and car loan emis become more expensive

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது ஐந்து வெவ்வேறு கடன் கால அளவுகளுக்கான மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் பேஸ்டு லெண்டிங் ரேட் (MCLR) விகிதத்தை 15 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் அக்டோபர் 15 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஓவர்நைட் (ஒரே நாள்) மற்றும் ஒரு மாத கால அளவுகளுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாற்றத்தினால், குறிப்பிட்ட MCLR கால அளவுகளுடன் இணைக்கப்பட்ட கடன்களைப் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் இனி அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது ஓராண்டு கால MCLR விகிதத்தை 8.70 சதவீதத்தில் இருந்து 8.85 சதவீதமாகவும், மூன்றாண்டு கால MCLR விகிதத்தை 8.80 சதவீதத்தில் இருந்து 8.95 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கடன் கால அளவுகளுக்கான தற்போதைய திருத்தப்பட்ட MCLR வட்டி விகிதங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

ஓவர்நைட் மற்றும் ஒரு மாத கடன்களுக்கான வட்டி விகிதம் தற்போதைய நிலையான 7.85% என்ற அளவில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. மூன்று மாத கடன்களுக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதத்தில் இருந்து 8.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆறு மாத கடன்களுக்கு வட்டி விகிதம் 8.60 சதவீதத்தில் இருந்து 8.75 சதவீதமாகவும், ஒரு வருட கடன்களுக்கு 8.70 சதவீதத்தில் இருந்து 8.85 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு வருட கடன்களுக்கான வட்டி விகிதம் 8.75 சதவீதத்தில் இருந்து 8.90 சதவீதமாகவும், மூன்று வருட கடன்களுக்கான வட்டி விகிதம் 8.80 சதவீதத்தில் இருந்து 8.95 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கடனுக்கான EMI உயருமா?

உங்களிடம் வீட்டுக் கடன் அல்லது SBI வங்கியின் MCLR விகிதத்துடன் இணைக்கப்பட்ட வேறு ஏதேனும் கடன் இருந்தால் புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வரும்போது உங்கள் கடனுக்கான செலவு அதிகரிக்கும். இருப்பினும், கடன் வாங்கிய அனைவரின் EMI சுமையும் உடனடியாக உயரும் என்று சொல்ல முடியாது. இந்த தாக்கம், உங்கள் கடன் எந்த அளவுகோலுடன் (benchmark) இணைக்கப்பட்டுள்ளது, நிலுவைத் தொகை எவ்வளவு, மீதமுள்ள கடன் காலம் எவ்வளவு மற்றும் வட்டி விகிதம் மறுநிர்ணயம் செய்யப்படும் தேதி எது என்பதைப் பொறுத்தே அமையும்.

MCLR விகிதம் என்றால் என்ன?

MCLR என்பது வங்கிகள் சில குறிப்பிட்ட வகை கடன்களுக்கான வட்டி விகிதங்களைத் தீர்மானிக்கப் பயன்படுத்தும் ஒரு குறைந்தபட்ச வட்டி விகித அளவுகோலாகும். இது வங்கிகள் நிதி திரட்டுவதற்கு ஆகும் செலவு மற்றும் அது தொடர்பான பிற செலவுகளை உள்ளடக்கியது. ஒரு வங்கி தனது MCLR விகிதத்தை உயர்த்தும்போது ​​அடுத்தமுறை வட்டி விகிதம் மறுநிர்ணயம் செய்யப்படும்போது ​​கடன் வாங்கியவர்கள் அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.

எந்தெந்த வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன?

SBI வங்கியின் இந்த நடவடிக்கை பிற வங்கிகளும் தங்கள் கடன் வட்டி விகிதங்களை மாற்றியமைத்து வரும் சூழலில் எடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கொள்கையைப் பின்பற்றி பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா போன்ற வங்கிகளும் அக்டோபர் மாதத்தில் தங்கள் கடன் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.

FD வட்டி விகிதங்களும் உயர்த்தப்படுமா?

கடன் வாங்கியவர்கள் வட்டிச் சுமை அதிகரிப்பு அபாயத்தை எதிர்கொள்ளும் நிலையில் ஃபிக்சட் டெபாசிட் (FD) முதலீடு செய்துள்ளவர்கள் வங்கிகள் தங்களுக்கு அதிக வருமானம் தருமா என்று எதிர்பார்க்கின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள SBI வங்கித் தலைவர் சி.எஸ். ஷெட்டி, வங்கி அமைப்பில் போதுமான பணப்புழக்கம் இருப்பதால் அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான வாய்ப்பு குறைவு என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link