ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (செப்டம்பர் 4) 45 நிமிடங்களுக்கு தனது யூபிஐ சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, செப்டம்பர் 4 அன்று நள்ளிரவு 12:15 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை யூபிஐ சேவைகள் கிடைக்காது என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே பராமரிப்புப் பணிகள் நிறைவடையும் என்று எஸ்பிஐ தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
பராமரிப்புக் காலத்திலும் வாடிக்கையாளர்கள் தடையின்றிப் பணப் பரிவர்த்தனை செய்ய ‘யூபிஐ லைட்’ ( UPI Lite) சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று அவ்வங்கி தெரிவித்துள்ளது. டிஜிட்டல் கட்டணங்கள் செலுத்தவும், பணம் அனுப்பவும், பிற பரிவர்த்தனைகளுக்காகவும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களால் யூபிஐ சேவைகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. மற்றொரு செய்தியையும் இவ்வங்கி வெளியிட்டுள்ளது. விரைவில் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் (MDR) கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட யூபிஐ பரிவர்த்தனைகள் மீது வணிகர் தள்ளுபடி கட்டணத்தை (Merchant Discount Rate – MDR) அரசு அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. செப்டம்பர் மாத நடுப்பகுதிக்குள் இது குறித்த அரசிதழ் அறிவிப்பு வெளியாகலாம்.
இது தொடர்பான அரசிதழ் அறிவிப்பை நிதி சேவைகள் துறை (D. F. S) வெளியிடலாம். அதைத் தொடர்ந்து தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) நடைமுறைப்படுத்துவதற்கான சுற்றறிக்கையை வெளியிடும். எனினும், துல்லியமான எம்டிஆர் கட்டணம், பரிவர்த்தனை வரம்பு மற்றும் கட்டமைப்பின் பிற விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. யூபிஐ மூலம் பணம் செலுத்தும் நுகர்வோர் எந்தவிதப் பரிவர்த்தனை கட்டணங்களையும் செலுத்த வேண்டியதில்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
நபரிடமிருந்து நபருக்கு (P 2 P) செய்யப்படும் யூபிஐ பரிவர்த்தனைகளும் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும். எம்டிஆர் அறிமுகப்படுத்தப்பட்டால் அது ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட மற்றும் குறிப்பிட்ட தொகைக்கு மேற்பட்ட வணிகர் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இருக்கும். மேலும் அது பெயரளவிலான கட்டணமாகப் பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது. பெரும்பான்மையான யூபிஐ பரிவர்த்தனைகள் வணிகர்களுக்கும் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வணிகர் தள்ளுபடி கட்டணம் (M. D. R) என்பது டிஜிட்டல் பரிவர்த்தனையைச் செயலாக்கம் செய்வதோடு தொடர்புடைய கட்டணமாகும். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஏற்பதற்காக வணிகர், கட்டணச் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு பொதுவாக இதனைக் செலுத்துகிறார்கள்.
கோவிட்-19 காலகட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக அரசு அனைத்துக் கட்டணங்களையும் நீக்கியதால், தற்போது யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம் கிடையாது. யூபிஐ-யின் நீண்டகால நிலைத்தன்மை, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் வளர்ந்து வரும் அபாயங்களுக்கு எதிரான பாதுகாப்பை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சட்டப்பூர்வ ஏற்பாடாக இந்த மாற்றத்தை அரசு விவரித்துள்ளது. மேலும், குடிமக்களுக்கு யூபிஐ தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்றும், எதிர்காலத்தில் எம்டிஆர் கட்டணம் வந்தால் அது ஒரு குறிப்பிட்ட வணிகர் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
