தமிழ்நாட்டின் அரசியல் களம் தற்போது திமுக Vs தவெக என மாறி வருகிறது. விஜய் 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியதில் இருந்து திமுக எதிர்ப்பை தொடர்ந்து கூர்மைப்படுத்தி வருகிறார். குறிப்பாக, சட்டப்பேரவையில் திமுக அரசுக்கு எதிராக விஜய் முன்வைக்கும் ஒவ்வொரு கருத்தும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று, மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது. இந்த சூழலில், அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த ஆறு தொகுதிகளில் இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தனித்தொகுதிகளில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நான்கு முனை போட்டிக்கு வாய்ப்பு
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நான்கு முனை போட்டியாக அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த தேர்தல் திமுக மற்றும் தவெக இடையேயான போட்டியை மட்டுமின்றி, மற்ற கட்சிகளுக்கும் தங்களது அரசியல் பலத்தை நிரூபிக்கும் களமாக அமையலாம் என கூறப்படுகிறது.
வேட்பாளர்களை அறிவித்த திமுக
இந்த நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக முதல் கட்சியாக அறிவித்துள்ளது. மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏவும் வழக்கறிஞருமான பரந்தாமன் போட்டியிடுகிறார். தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் எஸ். சுகன்யா திமுக வேட்பாளராக களமிறங்குகிறார்.
யார் இந்த பரந்தாமன்?
திமுக சட்டத்துறை இணைச் செயலாளராக உள்ள வழக்கறிஞர் பரந்தாமன், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் அரசியல் மேடைகளில் திமுகவின் நிலைப்பாடுகளை திறம்பட எடுத்துரைப்பவராகவும் அறியப்படுகிறார்.
ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் கட்சிகள்…அடுத்த திட்டம் என்ன?
2026 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், எறும்பூர் தொகுதியில் தமிழன் பிரசன்னா திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் அந்த தேர்தலில் தற்போதைய அமைச்சர் ராஜ்மோகனிடம் தோல்வியடைந்தார்.
சுகன்யாவின் பின்னணி என்ன?
தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த எஸ். சுகன்யா வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் தாராபுரம் பகுதியில் திமுக ஒன்றியச் செயலாளராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தொகுதிமக்களிடையே நல்ல அறிமுகம் இருப்பதாகவும், அந்த அடிப்படையில் சுகன்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் சத்யபாமா வெற்றி பெற்றிருந்தார். அவர் மீண்டும் தவெக சார்பில் களமிறக்கப்பட்டால், சுகன்யாவுக்கும் சத்யபாமாவுக்கும் இடையே நேரடி போட்டி உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இருவருமே வழக்கறிஞர்கள்
திமுக அறிவித்துள்ள இரண்டு வேட்பாளர்களுமே வழக்கறிஞர் பின்புலத்தை கொண்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. சட்டப்பேரவையில் திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வலுவான வாதங்களை முன்வைக்கக்கூடிய வேட்பாளர்களை களமிறக்க திமுக தலைமை திட்டமிட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இடைத்தேர்தலை புறக்கணிக்கலாம்
இன்று நடைபெற்ற திமுக உயர்நிலைக் கூட்டத்தில், வரும் இடைத்தேர்தலை புறக்கணிக்கலாம் என அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலின்போது இருந்ததைப் போல தற்போது திமுக கூட்டணி பலமாக இல்லை என்றும், கிட்டத்தட்ட திமுக தனித்து விடப்பட்டுள்ள சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் சுட்டிக்காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் தற்போது விஜய் தலைமையிலான தவெக வசம் சென்றுள்ள நிலையில், மக்களிடையேயும் அக்கட்சிக்கான ஆதரவு அதிகரித்து வருவதாக திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இடைத்தேர்தலை எதிர்கொள்வது திமுகவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு சாதகமாக இருக்காது என்ற கருத்தும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது.
தொடர் தேர்தல் தோல்விகள் ஏற்பட்டால், அது கட்சி தொண்டர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, ஏற்கனவே தேர்தல் தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் மீண்டும் தோல்வி ஏற்பட்டால், களப்பணியில் ஈடுபடும் தொண்டர்கள் துவண்டு போகும் சூழல் உருவாகலாம் என்றும் நிர்வாகிகள் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் கொடுத்த விளக்கம்
இவ்வாறு பல்வேறு காரணங்களை முன்வைத்து இடைத்தேர்தலை புறக்கணிப்பது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை தெரிவித்த நிலையில், திமுக தலைமை வேறு ஒரு கணக்கை முன்வைத்ததாக கூறப்படுகிறது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் இருவருமே வழக்கறிஞர்கள். இவர்களை வெற்றி பெறச் செய்து சட்டப்பேரவைக்கு அழைத்துச் சென்றால், தவெக தரப்பில் இருந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வலுவான பதில்களை உடனடியாக முன்வைக்க முடியும் என ஸ்டாலின் நிர்வாகிகளை சமாதானப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, சட்டப்பேரவையில் திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விவாதங்களில் திறம்பட செயல்படக்கூடிய வேட்பாளர்கள் கட்சிக்கு கூடுதல் பலமாக இருப்பார்கள் என திமுக தலைமை கருதியதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?
இதனால், இடைத்தேர்தலை புறக்கணிப்பது குறித்த ஆலோசனைகளுக்கு மத்தியில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவு இடைத்தேர்தல் வெற்றியை மட்டுமின்றி, எதிர்கால சட்டப்பேரவை அரசியலில் திமுகவின் நிலைப்பாட்டையும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Source link
