வீட்டுக்கே வரும் ரேஷன்!
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், அவர்களது வீடுகளுக்கே நேரில் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் வெகுவாகப் பயன்பெற்று வருகின்றனர்.
செப்டம்பர் மாத விநியோகம்!
அந்த வகையில், நடப்பு செப்டம்பர் மாதத்தில் 5, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்காகச் சென்னையில் உள்ள ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், கொளத்தூர், பெரம்பூர், ராயபுரம், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர், சோழிங்கநல்லூர், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயல் உள்ளிட்ட 19 மண்டலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
பயனாளிகள் மகிழ்ச்சி!
இப்பகுதிகளில் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் 1,346 ரேஷன் கடைகளின் விற்பனையாளர்கள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதியோருக்கு பெரிய நிவாரணம்!
65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் இச்சேவையைப் பயன்படுத்தி பயனடையுமாறு தமிழக அரசு சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் ஒவ்வொரு மாதமும் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதால் இட்டம் முதியோருக்கு பெரும் நிவாரணமாக இருக்கிறது.
ரேஷன் கடைகள் இருக்காது!
கிராமப்புறங்களைப் பொறுத்தவரையில், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரேஷன் கடைகள் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று சேவை செய்வதால் அன்றைய நாட்களில் ரேஷன் கடைகளில் வழக்கமான சேவைகள் கிடைக்காது. பெரும்பாலும் ரேஷன் கடைகள் மூடியே இருக்கும். எனவே அதற்கு ஏற்ப, இந்த தேதிகளுக்கு முன்பாகவே அல்லது அதற்குப் பின்னரோ ரேஷன் கடைக்குச் செல்லலாம்.
