தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது பலர் இன்னும் சில சிரமங்களைச் சந்திக்கின்றனர். சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டாக் ஸ்கேன் ஆகாமல் போவது அல்லது சர்வர் செயலிழப்பு காரணமாக பணம் செலுத்த முடியாமல் போவது போன்ற சிக்கல்களைப் பலர் எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளில், இரு மடங்கு சுங்க வரி செலுத்த நேரிடுமோ என்பதே மக்களுடைய மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. இது பெரும்பாலும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் சாலைப் போக்குவரத்து அமைச்சகமும் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாகத் தெளிவான விதிகளை வகுத்துள்ளன.
எனவே, உங்கள் ஃபாஸ்டேக் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். முந்தைய விதிகளின்படி, ஒரு வாகனத்தில் ஃபாஸ்டாக் இல்லாவிட்டாலோ அல்லது அதை ஸ்கேன் செய்ய முடியாவிட்டாலோ இரு மடங்கு சுங்க வரி வசூலிக்கப்பட்டது. இருப்பினும், இந் திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இப்போது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் செய்துள்ளது. அதன்படி, இரு மடங்கு வரி வசூலிக்கப்படுமா இல்லையா என்பது பணம் செலுத்தும் முறையைப் பொறுத்தது.
உங்கள் ஃபாஸ்டாக் ஸ்கேன் ஆகவில்லை என்றால், நீங்கள் பணத்திற்குப் பதிலாக UPI அல்லது Google Pay, PhonePe, Paytm போன்ற வேறு ஏதேனும் டிஜிட்டல் முறையைப் பயன்படுத்திப் பணம் செலுத்தினால் இரு மடங்கு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த நிலையில், உங்களிடம் வழக்கமான சுங்க வரியை விட 1.25 மடங்கு, அதாவது கூடுதலாக 25 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படும். நீங்கள் டிஜிட்டல் முறையில் செலுத்துவதற்குப் பதிலாக நேரடியாகப் பணமாகச் செலுத்தினால், விதிகளின்படி நீங்கள் இரு மடங்கு சுங்க வரியைச் செலுத்த வேண்டியிருக்கும். சுங்கச்சாவடிகளில் பணமில்லா மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஓட்டுநர் சுங்க வரியைச் செலுத்தாமல் சுங்கச்சாவடியைக் கடந்து சென்று, செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை 72 மணி நேரத்திற்குள் செலுத்தத் தவறினால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, இரு மடங்கு அபராதம் விதிக்கலாம். சுங்கச்சாவடிகளில் மோசடி அல்லது அதிக கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்க, உங்கள் ஃபாஸ்டாக்கை எப்போதும் செயல்பாட்டில் வைத்திருப்பது நல்லது. மேலும் போதுமான இருப்புத் தொகையையும் பராமரிக்க வேண்டும். ஒருவேளை ஸ்கேனர் பழுதடைந்து உங்களுடைய ஃபாஸ்டாக் ஸ்கேன் ஆகவில்லை என்றால், பணமாகச் செலுத்துவதற்குப் பதிலாக UPI மூலம் சுங்கக் கட்டணத்தின் 1.25 மடங்கைச் செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
