ஜிவி பிரகாஷ் – கயாடு லோஹர் நடிப்பில் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இம்மார்ட்டல்’. ஏகே ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள இப்படத்தில் டிஎம் கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படம் ஃபேண்டஸி கலந்த ஒரு த்ரில்லர் படமாக கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் ஜிவி பிரகாஷ் கலந்து கொண்டு பேசுகையில், “இந்த படத்தை பார்த்த நிறைய பத்திரிக்கையாளர்கள் கால் பண்ணி பாராட்டினார்கள். அப்போதே நினைத்தேன் இந்தப்படம் டார்லிங் படம் போல் ஹிட்டாகிவிட்டது என்று. ஒரு படம் ஹிட்டாகப்போகிறது என்றால் தானாக சில விஷயங்கள் நடக்கும். அதே போல் படம் ரிலீஸாகும் அன்று விநியோகஸ்தர்கள் நமக்கு கால் செய்தால் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதுவே நாம் ஃபோன் செய்து கேட்கும் சூழலில் வந்தால் அந்த நிலமையை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த படத்தின் ரஃப் கட் பார்க்கும் போது அந்த கொடிய மிருகம் வரும் போது பயம் வந்துவிடுமா என்ற பதட்டம் இருந்தது. சாம் சி.எஸ்ஸிடமும் இது தொடர்பாக கேட்டேன். ஆனால் படம் வெளியானப் பிறகு தியேட்டரில் பார்க்கும் போது ஒவ்வொரு காட்சியிலுமே சாம் சி.எஸ். பயமுறுத்திக்கொண்டே இருந்தார். சூப்பராக இசையமைத்திருந்தார். ஃபர்ஸ்ட் வெர்ஷனுக்கும் கடைசி வெர்ஷனுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. அதனால் சாம் சி.எஸ்… உங்களுடைய கடைசி வெர்ஷனுக்கு தான் நான் வெயிட் பண்ணப்போகிறேன். ஃபர்ஸ்ட் வெர்ஷனை எனக்கு காமிக்காதீங்க” என்றார்.
