– நமது நிருபர் –
நடிகர் அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான, ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தில், முதல்வர் விஜய் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஜித் நடிக்கும் கார் ரேஸ் தொடர்பாக ஆவணபடமான ‘கிளாடியேட்டர்ஸ்’, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தயாராகி வருகிறது. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியீடு, தமிழகத்தின் பல்வேறு தியேட்டர்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. டாகு டிராமாவாக படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில், தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக, பிரிட்டன் சென்றுள்ள, முதல்வர் விஜய், லண்டனில் அஜித் பங்கேற்கும் சில்வர்ஸ்டோன் – மிச்செலின் லே மான்ஸ் கப் கார் பந்தயத்திற்கு நேரில் சென்று, கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். போட்டி முடிந்த பின், ரேஸ் டிரஸ் அணிந்து வந்த விஜய், இந்திய தேசிய கொடியை அஜித்துடன் ஏந்தியபடி, போஸ் கொடுத்தார். அஜித் – விஜய் இணைந்து கொடுத்த புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தில், முதல்வர் விஜய் நடித்து வருதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில், விஜய் – அஜித் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை பகிரந்து, இரு பெரும் ஆளுமைகளுடன் பணியாற்றியது மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். ஹேஸ்டேக்கில் கிளாடியேட்டர்ஸ் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
