நடிகர் அஜித் குமாரின் கார் ரேஸ் தொடர்பான பயணம் ஆவணப்படமாக ‘கிளாடியேட்டர்ஸ்’ எனும் தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் அஜித்தின் ரேஸ் பயணம் மற்றும் அதில் அவர் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசப்படுகிறது. இப்படத்தை அஜித்தை வைத்து கிரீடம் படம் இயக்கிய ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். அப்படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷே இதற்கும் இசையமைக்கிறார். இப்படத்தை கோல்டன் டிரோபி ஃபிலிம் புரொடக்ஷன் பேனர் சார்பில் அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார்.
ஏற்கனவே ஒரு முன்னோட்டம் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனிடையே இப்படத்தின் டிரெய்லர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் குறிப்பிட சில திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இதில் ரசிகர்களுடன் இயக்குநர் ஏ.எல்.விஜய்,, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கலந்து கொண்டனர். டிரெய்லர் மொத்தம் 3 நிமிடங்களுக்கு அமைந்துள்ளது. இதில் ஷாலினி மற்றும் அவரது இரு குழந்தைகள் அஜித் குறித்து விவரிக்கின்றனர். படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெய்லர் திரையிடல் முடிந்த பிறகு ஏ.எஅல்.விஜய்யும், சுரேஷ் சந்திராவும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஏ.எல்.விஜய் பேசுகையில், “டிரெய்லரை அஜித் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அவருடைய ரேஸிங்கிலும் ஒரு டிராமா இருக்கிறது. இதில் அஜித் சாரை நீங்க பார்த்துக்கிட்டே இருக்கலாம். அவர் ஒரு ரியல் ஹீரோ. அது உங்களுக்கு படம் பார்க்கும் போது கண்டிப்பாக புரியும்” என்றார்.
பின்பு சுரேஷ் சந்திரா பேசுகையில், “இப்படத்தின் டிரெய்லரை தியேட்டரிலே ரிலீஸ் செய்யும் ஐடியா அஜித் சாருடையது. அதற்கு ரசிகர்கள் ஒத்துழைப்பு கொடுத்தது அவருடைய கணிப்புக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. இந்த படம் அஜித்தின் கனவு மட்டும் கிடையாது. எல்லா துறையிலும் அவரவர்களுக்கு ஒரு கனவு இருக்கும். அந்த கனவை அடைவதற்காக எப்படி போராட வேண்டும் என்ற உந்துதலை இப்படம் கொடுக்கும். நவம்பரில் படம் வெளியாகும். தேதி இன்னும் முடிவாகவில்லை. திரைப்பட வாரிய சான்றிதழ் முடிந்தவுடன் அது அறிவிக்கப்படும்” என்றார்.
