மத்தியப் பிரதேசத்தில் தனது சொந்த செலவில் தனியாளாக நதியை சுத்தம் செய்து பிரபலமான 21 வயது இளைஞர் சுரேந்திர சிங் சவுத்ரி என்கிற பிட்டு தபாஹி, தனது தூய்மைப் பணியை நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் தனது சொந்த செலவில் நதியை தனியாளாக சுத்தம் செய்து புகழ்பெற்ற 21 வயது இளைஞர் சுரேந்திர சிங் சவுத்ரி , சமூகப் பணியை நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் ‘ பிட்டு தபாஹி ’ என்று அறியப்படும் இவர், அடுத்து எந்த மாநிலத்திற்கு வர வேண்டும் என்பதை மக்களிடமே கேட்டு இன்ஸ்டாகிராமில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குப்பையால் மோசமடைந்த நதி
மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திர சிங் சவுத்ரி, தனது பகுதியில் உள்ள அர்ஜுன் நதி குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றால் மோசமாக மாசடைந்திருப்பதை கண்டு வேதனை அடைந்துள்ளார். இதையடுத்து, யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்காமல் நதியை சுத்தம் செய்யும் பணியை தானாகவே தொடங்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் குடியரசுதினத்தன்று இந்தப் பணியைத் தொடங்கிய அவர், தொடர்ந்து பல மாதங்கள் நதியில் இறங்கி குப்பைகளை அகற்றியுள்ளார்.
சொந்த செலவில் ரூ.30 ஆயிரம்
ஆரம்பத்தில் சில நண்பர்களுடன் இணைந்து நதியை சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல நண்பர்களின் பங்களிப்பு குறைந்த நிலையில், பிட்டு தபாஹியே தனி ஆளாக இந்தப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளார். இதற்காக தனது சொந்த பணத்தில் சுமார் ரூ.30 ஆயிரம் செலவு செய்ததாக கூறப்படுகிறது. நதியை சுத்தம் செய்வதற்கு முன்பும், பணியை மேற்கொண்ட பிறகும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.
நாடு முழுவதும் கவனம்
அவரது முயற்சி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, பிட்டு தபாஹியின் பணிக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் கிடைத்தன.அவரது தொடர் முயற்சிக்கு சர்வதேச அளவிலும் கவனம் கிடைத்தது. இதையடுத்து, உள்ளாட்சிநிர்வாகமும் அவருக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது. நதியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் சுமார் ரூ.14.77 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டமும் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலங்கள் பாராட்டு.. வெளிநாட்டு அழைப்பு
பிட்டு தபாஹியின் பணியைப் பாராட்டி தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவும் அவரது முயற்சியைப் பாராட்டியுள்ளார். மேலும், நெதர்லாந்தைச் சேர்ந்த தி ஓஷன் கிளீன்அப் அமைப்பும் சுரேந்திர சிங் சவுத்ரியை தங்களுடன் இணைந்து பணியாற்ற வருமாறு அழைத்ததாக தகவல்கள் வெளியாகின.
தவெக அடுத்த திட்டம்? விஜய் போடும் புது கணக்கு!
இனி அடுத்த மாநிலம் எது?
இவ்வாறு பல மாதங்களாக நதியை சுத்தம் செய்த பிட்டு தபாஹி, தற்போது தனது பணியைநாடுமுழுவதும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளார். அதற்கான முதல் கட்டமாக, அடுத்து எந்த மாநிலத்திற்கு வர வேண்டும்? என மக்களிடமே கேட்டு இன்ஸ்டாகிராமில் காணொளி வெளியிட்டுள்ளார்.ஆனால், மறுபுறம் அவர் நதிக்கரையில் வைத்து குப்பைகளை சேகரிக்க பயன்படுத்திய தொட்டிகளை மர்ம நபர்கள் உடைத்து மீண்டும் ஆற்றில் வீசியதாக கூறப்படும் தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், மறுபுறம் அவர் மேற்கொண்ட தூய்மைப் பணிக்கே இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துள்ள இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source link
