புதுடில்லி: பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தீவிர வெப்ப உயர்வால் எல் நினோ மிக வேகமாக வலுவடைந்து வருகிறது; இது அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீடிக்க 100 சதவீதம் வாய்ப்பு உள்ளது என உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போதைய எல் நினோ முந்தைய ஆண்டுகளை விட மிகவும் சக்திவாய்ந்ததாக உருவெடுத்து வருகிறது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமான ஒன்றாக மாறக்கூடும்.
வரும் மாதங்களில் மேலும் தீவிரமடைந்து, 2026ம் ஆண்டின் இறுதிக்குள் அதன் உச்சத்தை எட்டும். உலகம் எங்கும் உள்ள பெரும்பாலான நிலப்பரப்புகளில் இயல்பை விட அதிகமான வெப்பநிலையும், தீவிர வெப்ப அலைகளும் ஏற்படும்.
உலகளவில் மழைப்பொழிவு மற்றும் வானிலை முறைகளில் கடுமையான மாற்றங்கள் ஏற்படும். சில பிராந்தியங்களில் மிகக் கடுமையான வறட்சியும், சில இடங்களில் கடுமையான புயல் மற்றும் வெள்ள அபாயமும் ஏற்படும்.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை பலவீனமடைந்து, கடுமையான வறட்சி மற்றும் பற்றாக்குறை ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, இது ராபி பயிர்களுக்கான மழைப்பொழிவு குறைந்து, மிதமான குளிர்காலமாக அமையக்கூடும் என்று நிபுணர்கள் கூறினர். தற்போது பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 8 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளதால், இந்த ஆண்டின் இறுதியில் எல் நினோ தனது உச்சக்கட்ட வீரியத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
