பாலிவுட்டில் நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படம் கிட்டத்தட்ட ரூ.800 கோடிக்கு மேலான பட்ஜெட்டில் உருவாகிறது. இதில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும் ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் புகழ் யஷ்ஷும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் லக்ஷ்மன் கதாபாத்திரத்தில் ரவி துபேவும் அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோலும் நடிக்கின்றனர். இசையமைப்பாளர்களாக ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இசையமைக்கின்றனர். ஸ்ரீதர் ராகவன் எழுதுகிறார். முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
முதல் பாகம் இந்தாண்டு தீபாவளிக்கும் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகவுள்ளது. கடந்த ஆண்டு வெளியான படத்தின் அறிவிப்பு முன்னோட்டமும் அடுத்து வெளியான ராமர் கதாபாத்திர அறிமுக வீடியோவும் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் படக்குழு டெல்லியில் ‘பிரதம் சங்கல்ப்’ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடத்தி அதில் செய்தியாளர்கள் முன்னிலையில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இப்படத்தின் டிரெய்லர் கடந்த 24ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் சர்வதேச விநியோகத்துக்காக தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே இணையத்தில் டிரெய்லர் கசிந்து பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில் டிரெய்லர் ரிலீஸின் புதிய தேதியை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை(30.07.2026) அதிகாலை 4.15 மணிக்கு வெளியாகவுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மங்களகரமான பிரம்ம முகூர்த்தத்தில் டிரெய்லருடன் புதிய விடியலை உலகளவில் வரவேற்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
— Namit Malhotra (@malhotra_namit) July 28, 2026
