சென்னை : ‘தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதால், 9,576 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது’ என, மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை விபரம்:
* கடந்த, 2023 மார்ச் வரை, தமிழகத்தின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறன், 35,036 மெகாவாட்டாக இருந்தது. ஆனால், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் நிறுவு திறன், 7,175 மெகாவாட் மட்டுமே இருந்தது. இதனால், அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ததால், ஆண்டுதோறும் இழப்பு ஏற்பட்டது. கடந்த, 2023 மார்ச் நிலவரப்படி மொத்த இழப்பு, 1.62 லட்சம் கோடி ரூபாய்
* முறையான பராமரிப்பின்மையால், அனல் மின் நிலையங்களில் மின் தடைகள் ஏற்பட்டன. இதனால், தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதால், 9,576 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது
* வட சென்னை விரிவாக்க மின் நிலையத்தின் குறைவான செயல் திறன், சாம்பல் கையாளும் அமைப்பு சரியாக செயல்படாததால், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 131.58 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது
* நிலக்கரி வழங்கியதில் பற்றாக்குறை, அதை சரிசெய்வதற்கு அதிக விலைக்கு நிலக்கரியை கொள்முதல் செய்தது ஆகியவற்றால், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, 3,941 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது. 2001 முதல், 2024 வரை நிலக்கரி பற்றாக்குறையை கணக்கிடவில்லை
* நிலையான விலை முறையில் இருந்து, தொழில் துறை நடைமுறையான மாறும் விலை முறைக்கு மாற தவறியதால், 1,244.10 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது. குறைந்த தரத்திலான நிலக்கரியை ஏற்றுக் கொண்டதால், மின் உற்பத்தியை சரிகட்ட கூடுதல் நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. இதனால், 1,563 கோடி ரூபாய் தவிர்த்திருக்கூடிய செலவு ஏற்பட்டது
* ராமநாதபுரம் உப்பூர் அனல் மின் திட்டத்தில், 2,020 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, எந்த ஒரு நன்மை பயக்கும் பயன்பாடும் இல்லாமல் செயலற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளன
* எரிவாயு மின் நிலையங்கள் வழக்கத்தை விட, அதிகமான எரிவாயுவை பயன்படுத்தியதன் விளைவாக, 296 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
