புதுடில்லி: “அமெரிக்காவில், வரும் டிசம்பரில் நடக்கும், ‘ஜி – 20’ நாடுகளின் உச்சி மாநாட்டில், எங்கள் அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்களின் பட்டியலில், பிரதமர் மோடிக்கு முதலிடம் இருக்கும்,” என, நம் நாட்டுக்கான அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவில் வரும் டிசம்பர் 14 மற்றும் 15ம் தேதி, ‘ஜி – 20’ நாடுகளின் உச்சி மாநாடு நடக்கவுள்ளது. இதில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இதுகுறித்து நம் நாட்டுக்கான அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் கூறியதாவது:
‘ஜி – 20’ மாநாட்டில், உலக நாடுகளைச் சேர்ந்த 35 தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், யாரை சந்திக்க விரும்புகிறீர்கள்? என அதிபர் டிரம்பிடம் கேட்டால், அந்தப் பட்டியலில் பிரதமர் மோடிக்கு தான் முதலிடம் இருக்கும். அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை ஒரு நண்பராக கருதுவதால், அப்பயணம் குழு சந்திப்பைத் தாண்டி, மேலும் பல விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
அதிபர் டிரம்புடன் பேசும் போதெல்லாம், கடந்த 2020ல் இந்தியாவில் அரசு முறைப்பயணமாக வந்ததை அற்புதமான நிகழ்வு எனக் குறிப்பிடுவதுடன், அவரது நெருங்கிய நண்பரான பிரதமர் மோடியை மிகவும் மகிழ்ச்சியுடன் அடிக்கடி நினைவுகூர்வார். இரு தலைவர்களுக்கும் இடையே தனிப்பட்ட நல்லுறவு மற்றும் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தான் இதற்கு காரணம்.
இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான பேச்சுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும். தற்போது இந்தியா- – அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 23 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில், இதை, 47 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
இந்தியாவின் நீடித்த வளர்ச்சிக்கு, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடே காரணம். இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம். இரு தரப்பிலான ராணுவ உறவு என்பது வெறும் விற்பனை சார்ந்தது மட்டுமல்ல; அது, நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. அமெரிக்கா, எல்லா நாடுகளுக்கும் ராணுவ உபகரணங்களை விற்பதில்லை.
இந்தியாவுடன் நெருக்கமான உறவை, அமெரிக்கா விரும்புவதால், எங்கள் நாட்டின் அரசு பிரதிநிதிகள் அடிக்கடி இந்தியாவிற்கு வருகை தருவர். வரும் அக்டோபரில், எங்கள் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மீண்டும் இந்தியா வர உள்ளார். இவ்வளவு குறுகிய காலத்தில் அவர் இருமுறை வருவது மிகவும் அரிதான ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.
