‘அது முறையல்ல…’ -மீண்டும் சிக்கலில் யூடியூபர் இர்பான்

பிரபல யூடியூபர் இர்பான் தனது குழந்தை பிறப்பதற்கு முன்பே அதன் பாலினத்தை வீடியோவாக வெளியிட்டுப் பரப்பரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில், அவரை மீண்டும் நேரில் அழைத்து தீவிர விசாரணை நடத்தக் கோரி புதிய புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது யூடியூபர் இர்பானுக்கு சட்ட ரீதியாக மீண்டும் ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது மனைவியுடன் துபாய்க்குச் சென்றிருந்த யூடியூபர் இர்பான், அங்கு தனது கருவுற்ற மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்த முன்கூட்டியே கண்டறிந்தார். இந்தியாவில் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறிந்து அறிவிப்பது சட்டப்படி குற்றமாகும். ஆனால் அவர் அதனை ஒரு வீடியோவாகப் பதிவு செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டது தமிழகத்தில் கடுமையான சர்ச்சையையும், அவருக்குப் பெரிய சட்டச் சிக்கல்களையும் ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் இந்த விவகாரத்தில் தலையிட்டது. கடந்த ஓராண்டிற்கு முன்னதாக இர்பானை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் அலுவலகத்திற்கு வரவழைத்து, அங்குள்ள மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் அவரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது.

அந்த விசாரணையின் போது, தான் செய்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்ட இர்பான், அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்பு கடிதம் ஒன்றையும் அதிகாரிகளிடம் எழுதிக் கொடுத்தார். அதனடிப்படையில் அதிகாரிகள் அவருக்கு மன்னிப்பு வழங்கி, அந்தப் புகாரை அப்போது சமரசம் செய்து முடித்து வைத்தனர். இருப்பினும், சட்டத்தை மீறி பாலினத்தை வெளிப்படுத்திய விவகாரத்தில் வெறும் மன்னிப்பு கடிதத்தை மட்டும் பெற்றுக்கொண்டு இந்த வழக்கை முடித்து வைத்தது முறையல்ல என்ற கருத்து சமூக ஆர்வலர்களிடையே எழுந்தது. 

இந்தச் சூழலில்தான், இந்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மீது முறையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அவரை மீண்டும் நேரில் அழைத்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் புதிய புகாரைப் பதிவு செய்துள்ளார். இதனால் சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் மீண்டும் தீவிரமான சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link