“அதே பஞ்ச் டயலாக், சினிமா வசனங்கள், ஆக்டிங்…”

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 3ஆம் தேதி முதல்வர் விஜய் தாக்கல் செய்த காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தவெக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், 3 நாள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவை இன்று (07-09-26) கூடியது. அப்போது, சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். அப்போது முதல்வர் விஜய், திமுக குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடுமையாக விமர்சித்து ஆவேசமாகப் பேசினார். திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து முதல்வர் விஜய் பேசியதைத் தொடர்ந்து, அதற்கு பதில் அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். ஆனால் சபாநாயகர், பதில் அளிக்க அனுமதி அளிக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறினார். இதையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதனை தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கடந்த வியாழக்கிழமை காவல்துறை விவாதத்தில், 116 நாட்கள் ஆட்சியில் சட்ட ஒழுங்கு எந்த அளவுக்க் சீர்கெட்டு போயிருக்கிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் பேசியிருந்தேன். முதல்வரிடம் நேரடியாக 15 கேள்விகளை வைத்திருந்தேன். இன்று முதல்வர் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வரை பேசினார். அதில் முதல் 10,15 நிமிடங்கள் காவல்துறையின் சார்பாக என்னென்ன நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று சொன்னார். நாங்கள் அமைதியாக கேட்டிருந்தோம். 15வது நிமிடத்திற்குப் பிறகு, எந்தவித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளை எங்கள் மீது வைக்க ஆரம்பித்துவிட்டார். மீண்டும் மீண்டும் திமுக ஆட்சி நடக்கிறது என்ற நினைப்பிலேயே முதல்வர் பொய்யான குற்றச்சாட்டுகளை வைக்கிறார். சில கட்சி கூட்டங்களில் எங்களுடைய உறுப்பினர்கள் வெளியே இந்த அரசின் மீது வைத்த விமர்சனங்களை எல்லாம் உள்ளே கொண்டு வந்து பேசியிருக்கிறார். நானும் சட்டமன்ற உறுப்பினர்களுடம் முதல்வர் வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று சபாநாயகரிடம் கேட்டோம். ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனால் நாங்கள் அனைவரும் வெளிநடப்பு செய்துவிட்டோம்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என முதலில் சபாநாயகர் ஒப்புக்கொண்டார். ஆனால், என்ன அழுத்தம் வந்தது எனத் தெரியவில்லை? முதல்வர் சொன்னதாலா அல்லது யாராவது ஒரு அமைச்சர் சொன்னதாலா எனத் தெரியவில்லை, திடீரென அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். நாங்கள் வைத்த ஒரு கேள்விக்கும் முதல்வர் சொல்லவில்லை. கடந்த வியாழக்கிழமை, திங்கட்கிழமை பதில் சொல்கிறேன் என்று சொல்லிட்டு வேகமாக ஓடி போயிட்டார். நான் கூட, 3 நாள் டைம் இருக்கிறது நல்லா மனப்பாடம் செய்துவிட்டு ஏதாவது தயார் செய்துவிட்டு வருவார் என நினைத்தேன். ஆனால் அன்றைக்கு எப்படி ஓட்ட பந்தயத்தில் ஓடின மாதிரி ஓடினாரோ, இன்றைக்கு மனப்பாடம் செய்துவிட்டு ஒப்புவித்தல் போட்டி மாதிரி சட்டசபையில் தவறாக கருத்துக்களை பொய்யான குற்றச்சாட்டுகளை ஒப்பித்துள்ளார். அதே பஞ்ச் டயலாக், அதே சினிமா வசனங்கள், அதே ஆக்டிங்… ரீல்ஸ்காக மட்டுமே இந்த முதல்வர் இந்த பதிலுரை வழங்கியிருக்கிறார். சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக நாங்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் வெறும் பஞ்ச் டயலாக், வெறும் டைவர்ஷன் டாக்டிக்ஸ் தான்.

உதாரணத்திற்கு அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர், மாவட்ட செயலாளர்கள் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை போறீங்க என்று கேட்டால் அதற்கு மாறாக திமுக ஆட்சியில் இவர்கள் மீது இவ்வளவு வழக்கு இருக்கிறது என எங்கள் மீது திருப்புகிறார். வழக்கு இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம். அவர்களுடைய கட்சியைச் சேர்ந்தவர் நேற்று சென்னையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதைப் பற்றியெல்லாம் பதில் சொல்லாமல் 1970க்கு போய்விட்டார். சர்க்காரியா கமிஷனைப் பற்றி பேசுகிறார், மிசாவைப் பற்றி பேசுகிறார். மிசாவைப் பற்றி பேசுவதற்கு இவருக்கு அருகதை இருக்கிறதா? சர்க்காரியா கமிஷன் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா? யாரோ எழுதி கொடுத்ததை மூன்று நாளாக உட்கார்ந்து மனப்பாடம் செய்துவிட்டு இங்கே வந்து வாந்தி எடுக்கிறார். கொடநாட்டில் போய் இவருடைய படம் ரிலீஸுக்காக வாட்ச்மேன் வேலை பார்த்தவர் தான் இந்த முதல்வர். இவருக்கு மிசாவைப் பற்றியோ, எங்களுடைய தலைவரைப் பற்றியோ பேசுவதற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா? இவர் அரசியலுக்கு வந்ததே ஆக்சிடெண்ட் தான், ஆட்சியைப் பிடித்தது ஒரு பெரிய விபத்து. இவருக்கு மிசாவைப் பற்றியோ சர்க்காரியா கமிஷனைப் பற்றியோ பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. அதில் எந்த ஆதாரமும் கிடையாது, வெறும் குற்றச்சாட்டுக்கள் தான்” என்று கடுமையாக விமர்சனம் செய்தார். 

Source link