“அதை கூட கிண்டல் செய்தால் என்ன செய்வது?”

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தார். அப்போது அவர், கடந்த கால திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களைக் குறிப்பிட்டுத் திமுகவினர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இதில் முதல்வர் விஜய் மிசா குறித்து பேசும் போது, திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினைச் சைகை மூலம் உருவக் கேலி செய்யும் விதமாகப் உடல்மொழி செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் விஜய்க்கு பதிலளிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் இன்று காலை வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், மிசா காலத்தில் தனக்கு நடந்த அடக்குமுறைகளைப் பற்றி பேசிய அவர், சர்க்காரியா கமிஷன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்தார்.

மேலும், முதல்வர் பதவியில் இருக்கும் விஜய் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்றும், சட்டமன்ற மாண்பை குலைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும், ஆட்சி நிர்வாகத்தை சினிமா சூட்டிங் மாதிரி நடத்துவதாகவும் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார். மு.க.ஸ்டாலின் இந்த விமர்சனத்துக்கு தவெக பதிலடி கொடுக்க, அதற்கு திமுக மீண்டும் பதிலடி கொடுக்க என இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் மு.க.ஸ்டாலின் 1982லேயே தளபதி என்று அழைக்கப்பட்டவர், அழைத்தவன் நான் தான். இப்போது வேறு யாரோ உரிமை கொண்டாடுகிறார்கள். மிசாவில் அவர் கைதானதற்கு எந்தவிதமான சான்றுகளும் இல்லை என்று வரலாற்றை சரியாக தெரிந்து கொள்ளாமல் பேசுவது வேதனையாக இருக்கிறது. இன்று காலை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுடைய அந்த வீடியோ என்பது மிகவும் கண்ணியமான முறையில் உண்மைகளை விளக்குவதாக அமைந்திருக்கிறது. அதை கூட கிண்டல் பேசினால் என்ன செய்வது என்று தெரியவில்லை, எந்த பிம்பமும் உடையவில்லை. எங்களுக்கு இருப்பது உண்மையான உருவம், உண்மையான வரலாறு.

1976 ஜூன்31ஆம் தேதி இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனது என்று ஆட்சி கலைக்கப்பட்டது. பிப்ரவரி 1இல் இருந்து பல தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். முதலமைச்சராக இருந்த கலைஞர் வீட்டுக்கும் காவல் துறையினர் வருகிறார்கள். இரண்டாம் தேதி மு.க.ஸ்டாலினை கைது செய்து வேனில் ஏற்றுவதும், தலைவர் உட்பட எல்லோரும் அவரை வழியனுப்புவதற்கும் புகைப்பட சான்றுகள் இருக்கின்றன. சிறையில் கைது செய்யப்பட்ட அடுத்த நாளே வார்டன்களும் ஆயுள் தண்டனை கைதிகளும் சேர்ந்து ஒவ்வொரு அரைக்கதவாக திறந்து உள்ளே இருந்தவர்கள் எல்லாம் அடிக்கிறார்கள் அடிபட்டவர்களில் இன்றைக்கு உயிரோடு இருப்பவர்கள் வீரமணி, ஆற்காடு வீராசாமி போன்றவர்கள் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் ஸ்டாலின் மீது விழுந்த அடிகளை வாங்குவதற்காக குறுக்கை விழுந்த அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு அந்த சிறைச்சாலையில் உயிர் நீத்தார்.

அது பற்றி நாங்கள் நிறைய பேசியிருக்கிறோம். நிறைய நடந்திருக்கிறது. இப்பொழுதும் கூட பதற்றப்பட்டு நாங்கள் பேசவில்லை. அவர்கள் பாணியிலும் பேச விரும்பவில்லை. அது எங்களுடைய பழக்கமும் இல்லை. ஒரு பெரிய  வரலாற்று நேரத்தில் பங்கெடுத்த ஒரு தலைவரை, இன்றைக்கு ஆட்சி பொறுப்புக்கும் அதிகாரத்திற்கும் வந்துவிட்டோம் என்ற காரணத்தினால் கொச்சைப்படுத்துவது நாகரீக அரசியல் கிடையாது. எங்கள் தலைவரும் விளக்கம் சொல்லி இருக்கிறார். இப்பொழுது நானும் மக்களுக்கு விளக்கித்தான் சொல்கிறேன். இதற்கு நிறைய ஆதாரங்களும் அடையாளங்களும் இருக்கின்றன. இவர்கள் இப்படி பேசியதன் மூலம் மக்களுக்கு இதை பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக தெரிவிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு எங்களுக்கு தந்தார்களே என்று நாங்கள் நன்றிதான் சொல்ல முடியுமே தவிர உங்களுக்கு என்ன தெரியும்? உங்களுக்கு தகுதி இருக்கிறதா? வரலாறு தெரியுமா? என்றெல்லாம் நாங்கள் பேச விரும்பவில்லை” என்று கூறினார். 

Source link