எழுதியவர்: அங்கிதா தேஷ்கர்
முன்னாள் சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான மல்லோஜுலா வேணுகோபால், கட்சிரோலியில் உள்ள கோண்ட்வானா பல்கலைக்கழகத்தின் கிராமப் பஞ்சாயத்து திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி மையத்தில் தற்காலிக ஒருங்கிணைப்பாளராக இணைந்துள்ளார். அவரது தேர்வு குறித்துப் பேசிய கோண்ட்வானா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பிரசாந்த் போகாரே, வேணுகோபால் இந்தப் பதவிக்குத் தகுதியானவராகக் கண்டறியப்பட்டதாகவும், தேர்வுக்குழுவால் அவரது “அறிவும் அனுபவமும்” இந்த நடைமுறைக்கு ஏற்றதாகக் கருதப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பூபதி மற்றும் சோனு ஆகிய பெயர்களாலும் அறியப்படும் முன்னாள் மாவோயிஸ்ட் தலைவரும், சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) அமைப்பின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான மல்லோஜுலா வேணுகோபால் (70), கோண்ட்வானா பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார். வேணுகோபால் 2010-ல் சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) அமைப்பின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் ஒரு ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவர் என்றும், அவரது தந்தையும் தாத்தாவும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர் 1980-களில் ‘மக்கள் யுத்தக் குழு’ (People’s War Group) அமைப்பில் இணைந்தார்.
உளவுத்துறை வட்டாரங்கள் கூறியபடி, வேணுகோபால் அந்த அமைப்பின் கொள்கை ரீதியான தலைவராகவும், மாவோயிஸ்ட் அமைப்பிற்கும் வெளி உலகிற்கும் இடையே ஒரு தொடர்பாளராகச் செயல்பட்டு தகவல் தொடர்பு நிபுணராகவும் இருந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம், பல உள்ளூர் இளைஞர்களுடன் விண்ணப்பித்த வேணுகோபால், நேர்காணலுக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்டார்.
ஒருங்கிணைப்பாளர்களாக, இவர்கள் கட்சிரோலி முழுவதும் உள்ள கிராமங்களுக்குச் சென்று கிராம சபைகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவார்கள். பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான விரிவாக்கம்) சட்டம் (பெசா PESA) மற்றும் காடு தொடர்பான சட்டங்களின் கீழ் பழங்குடியின சமூகத்தினருக்கு உள்ள உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.
வேணுகோபால் கடந்த ஆண்டு அக்டோபர் 14-ம் தனது 60-க்கும் மேற்பட்ட கூட்டாளிகளுடன் காவல்துறையினரிடம் சரணடைந்தார். பழங்குடியின மக்களிடையே நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் செலவிட்ட பிறகு, அவர்களுக்காகத் தொடர்ந்து பணியாற்ற விரும்பியதாக அவர் கூறினார்.
“முன்பைப் போலவே, நான் மக்கள் மத்தியில் செல்வேன். அரசியலமைப்பு நமக்கு உரிமைகளை வழங்குகிறது, அதன்படி நாங்கள் செயல்படுவோம்” என்று அவர் கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்தார்.
தனது புதிய பொறுப்பு குறித்துப் பேசிய வேணுகோபால், பழங்குடியினப் பகுதிகளில் அரசியலமைப்பு விதிகளைச் செயல்படுத்துவதில் பங்களிக்க இந்த வாய்ப்பு உதவும் என்று கூறினார்.
“1996-ல் பெசா சட்டம் (PESA) இயற்றப்பட்ட போதிலும், 2014-15 வரை அதை எதிர்த்து தவறான செயலைச் செய்தோம். சில பகுதிகளில் 2020 வரை அதைத் தொடர்ந்து எதிர்த்ததால், சட்டத்தால் வழங்கப்பட்ட சட்டப்பூர்வ நன்மைகளை மக்கள் பெறுவதைத் தடுத்தோம்” என்று அவர் கூறினார்.
இது குறித்துப் பேசிய கட்சிரோலி எஸ்.பி எம். ரமேஷ், “சரணடைந்த பிறகு, சோனு ஒரு கற்பித்தல் அல்லது ஆராய்ச்சி வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தார். சில ஆராய்ச்சிகள் மூலம், கட்சிரோலியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திலேயே பழங்குடியினர் ஆய்வு மையம் இருப்பது தெரியவந்தது. நான் துணைவேந்தருக்குப் பரிந்துரை செய்தேன், பின்னர் ஒரு குழு அவரை நேர்காணல் செய்தது. அவர் பணியாற்றக்கூடிய ஒரு வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும்” என்று கூறினார்.
