அதற்கு முன்னதாக காவல்துறை சார்பில் முதல்வர் அளித்த பதிலுரையில் திமுக வைத்த குற்றச்சாட்டுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தினர் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், முதல்வர் விஜய் பேசியதில் எதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறியதால் அதனை கண்டித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகரை கண்டித்து அவரின் இருக்கையை முற்றுகையிட்டனர்.
மேலும் அவர்கள் அவையின் கீழே அமர்ந்து தொடர் முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களை அழைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். பேரவைக்குள் நுழைந்த அவை காவலர்கள், திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். அதனை தொடர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரபட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தின் போது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது உரிமை மீறல் புகாரை முன்வைத்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “காலையில் சட்டப்பேரவைத் தலைவர் கவனத்திற்கு இந்த சட்டப்பேரவையின் உரிமை மீறல் பிரச்சனையை நாங்கள் கொண்டு வந்தோம். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகள் விதி எண் 219ன் கீழ் முன்னாள் அமைச்சர் இன்றைய சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு 2021-2026 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த போது 14.01.2026 நாளிட்ட அரசாணை நம்பர் 06 மூலம் 2026 – 2027ஆம் ஆண்டிற்கான சி.ஆர்.ஐ.டி.பி திட்டத்தின் கீழ் 80 பணிகளுக்கு ரூ. 2,000 கோடி முன்கூட்டிய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அத்தொகை 2026- 27ல் மொத்த திட்ட அனுமதிக்குள் பின்னர் சரி செய்யப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் 2026- 27 மானியக் கோரிக்கை பேரவையால் வாக்களிக்கப்படவோ நிறைவேற்றப்படவோ இல்லை. இருப்பினும் இப்பணிகளுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டு 2025- 2026 நிதியாண்டிலேயே 80 பணி ஆணைகளும் வழங்கப்பட்டு எதிர்கால பட்ஜெட் ப்ரோவிஷன் மீது ரூ.2, 000 கோடி ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது சட்டமன்ற நடைமுறைக்கு எதிரானது. சட்டமன்றத்தில் பட்ஜெட் அங்கீகரிப்பு இல்லாமலேயே எதிர்கால பட்ஜெட்டில் இருந்து 2000 கோடி ரூபாயை சட்டமன்ற அனுமதியுடன் எடுத்திருக்கிறார்கள். இது பேரவையின் முன் அனுமதி இன்றி பட்ஜெட்டை எதிர்பார்த்து பொறுப்பு ஏற்படுத்திய ஆன்டிசிபேஷன் ஆப் தி பட்ஜெட் (Anticipation of the budget) ஆகும். அரசியலமைப்பு சட்ட உறுப்புகள் 2002 முதல் 2006 வரை மாநிலத்தின் செலவினங்களை பரிசீலித்து மானியம் வழங்கும் அதிகாரத்தை பேரவைக்கு அளிக்கப்படுகின்றன. குறிப்பாக உறுப்பு 203ன் கீழ் மானியத்தை ஏற்க மறுக்க அல்லது குறைக்க பேரவைக்கு உள்ள அதிகாரம் ஒப்பந்த பொறுப்பை முன்கூட்டியே உருவாக்கியதால் செயல்முறையில் பறிக்கப்பட்டுள்ளது. பின்னர் நிதி ஒதுக்கீடு பெறுவது முன்பே உருவாக்கப்பட்ட அங்கீகாரமற்ற பொறுப்பை சட்டபூர்வமாக்காது. எனவே பேரவையின் நிதி மேலாதிகத்தையும் கண்ணியத்தையும் பாதிக்கும் இவ்விகாரத்தை பேரவை விதி 225ன் கீழ் அவை உரிமை குழுவிற்கு விசாரணைக்கு அனுப்புமாறு பணிவுடன் கூறுகிறேன். சட்டமன்றத்தில் தான் பட்ஜெட்டை ஒப்புதல் வாங்க முடியும். ஆனால் தேர்தல் நேரத்தில் திமுக தான் அடுத்து வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் மானியத்துக்கு ஒப்புதல் வாங்காமல் எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ.2,000 கோடியை ஒதுக்கியது மிகப்பெரிய தவறு. இதில் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது” என்று கூறினார்.
