“அன்பில் மகேஷ் கண்டிப்பாக மன்னிப்பு கேட்கணும்” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி!

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (29-10-26) காலை 10 மணியளவில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், அரசின் நிலத் திட்டங்கள், நிர்வாக ரீதியிலான முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த கூட்டம் முடிந்த பிறகு தலைமைச் செயலக வளாகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்த அமைச்சரவை கூட்டத்தில் 4 முக்கிய விஷயங்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், 8 நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான அனுமதி வழங்குவது, மதமாற்றம் செய்யப்படும் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து என்ற உத்தரவை சீராய்வு மனு தாக்கல் செய்வது, சமூக நீதி கணக்கெடுப்பு தொடர்பாக ஆணையம் அமைப்பது, தாழம்பூரில் அனாதீன நிலம் விவகாரத்தில் ஆணையம் அமைப்பது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து பொருளாதார நிபுணர் கலையரசனை போலீசார் சட்டவிரோதமாகக் கைது செய்து அழைக்கழித்ததாகக் கூறப்படும் புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இது உள்ளூர் காவல்துறையால் நடந்த தவறு. இது குறித்து நானும், மற்ற அமைச்சர்களும் கலையரசனிடம் பேசினோம். அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக நேற்று காலை 5:30 மணிக்கு எனக்கு தகவல் வந்தது. அதன் பிறகு காவல் ஆணையரிடம் பேசி, இது தவறானது என்று கூறினேன். கலையரசனின் பெயரை போட்டு இன்ஸ்டாகிராமில் ஒரு கமெண்டை போலியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எம்.எல்.ஏ குறித்த தவறான பதிவை யாரோ செய்திருக்கிறார்கள். அதனால் உள்ளூர் காவல் நிலைய போலீசாரும் அவரை விசாரித்திருக்கிறார்கள். உடனே நானும் மற்ற அமைச்சர்களும் தொலைப்பேசியில், தவறு நடந்துவிட்டது என அவரிடம் பேசினோம்” என்று கூறினார்.

இதையடுத்து அன்பில் மகேஷ் கைது குறித்து பேசிய அவர், “திமுக அமைச்சர்கள் தவறு செய்தால் கேள்வி கேட்கக்கூடாது என நினைக்கிறார்கள். நூற்றுக்கணக்கான பள்ளிகளை மிரட்டி பணம் பறித்திருக்கிறார்கள். அவர் தவறு செய்திருக்கிறார், பள்ளிகள் புகார்கள் கொடுத்திருக்கிறது. குழந்தைகளுடைய பாதுகாப்பைச் சமரசம் செய்து குழந்தைகள் மரணம் அடைந்தாலும் பரவாயில்லை என்று கல்விக்காக சேவை செய்த மிஷனரி பள்ளிகளை மிரட்டி பணம் பறித்திருக்கிறார்கள். இது வெட்கக்கேடானது, இதற்கு அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்” எனப் பேசினார்.