திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்பட திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீடுகளில் இன்று அதிரடியாக நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை குறித்து முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், ரெய்டு நடத்தி திமுகவினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்களா? என முதல்வர் விஜய்யை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் – ஊடகங்களின் முக்கிய செய்திகளையும் திசைதிருப்ப ’ரோடு ஷோ’ நடத்தலாமா? ’ரைடு ஷோ’ நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க. எனும் ’தமிழ்நாடு கிளை வாஷிங் மிஷின்’ , தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் ‘வெற்றி பழிவாங்கும் அரசியல்’ திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்!
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் – முதலமைச்சர் மேடையில் பஞ்ச் டையலாக் என்ற பெயரில் பல மாடுலேஷன்களில் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும், இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது! சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த த.வெ.க. ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது.
இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்!” என கூறியுள்ளார்.
முன்னதாக, திமுக முன்னாள் எம்எல்ஏக்களான அணைக்கட்டு நந்தகுமார், நாமக்கல் ராமலிங்கம் மற்றும் திருச்சி, துறையூர் திமுக நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி ஆகியோர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
