"அமைச்சரானதும் ஊர்க்கிணற்றைப் பூட்டிட்டாங்க ஜெகதீஸ்வரி" – வருந்தும் சொந்த கிராம‌ மக்கள்

தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்குவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மிகச் சமீபமாக அமைச்சர் ஜெகதீஸ்வரி சொந்தக் கட்சி நிர்வாகியிடம் பேசியதாக வெளியான ஆடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி, அதன் தொடர்ச்சியாக கட்சி நிர்வாகி ராஜகுரு என்பவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அந்த ஆடியோவில் சொந்தக் கட்சி நிர்வாகியையே தன்னுடைய எல்லைக்குள் வந்ததற்காக ‘கொன்னுடுவேன்’ என்று பேசியிருந்தார் அமைச்சர். ஏற்கனவே சில தினங்களுக்கு முன் பேனரில் தன் பெயரை சக அமைச்சர் கீர்த்தனா பெயருக்குக் கீழ் போட்டதாக மாவட்ட ஆட்சித்தலைவரை இவர் பொதுவெளியில் கடிந்து கொண்டது நினைவிருக்கலாம்.

இந்தச் சூழலில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பிறந்த சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை அருகேயுள்ள பனைவிளை கிராமத்திலேயே ஊர் மக்கள் அமைச்சர் மீது மன வருத்தத்திலும் கடுமையான கோபத்திலும் இருப்பதாக ஒரு தகவல் கிடைக்க, நிஜமா என அறிய அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம்.

அமைச்சர் ஜெகதீஸ்வரி

”பெயரையெல்லாம் போட மாட்டீங்கன்னா பேசறோம், ஏன்னா அந்தப் பொண்ணு எம்.எல்.ஏ.வுக்கு நின்னு ஜெயிச்சு அமைச்சர் ஆகற வரைக்கும் ஒரு மாதிரி இருந்தாங்க. அமைச்சர் ஆன பிறகு அதோட முகமே மாறிடுச்சு. முன்னாடி ‘ரிப்போர்ட்டர்’னு சொல்லிட்டு ஊருக்கு நல்லது செய்யறேன்னு சொல்லிட்டிருந்தாங்க. ஆனா பெரிய பத்திரிகை நிறுவனமெல்லாம் இல்ல.

வாயிலயே வராத ஏதோவொரு பத்திரிகை பேரைத்தான் சொல்லுவாங்க. ஆனால் கூட பைப்ல தண்ணீ வராட்டி, கரண்ட் இல்லாட்டி சம்பந்தப்பட்ட இடங்களுக்குப் போய் பேசறேனு சொல்லுவாங்க.

இதனாலேயே ஊர் மக்கள் மத்தியிலயும் கொஞ்ச செல்வாக்காவும் இருந்தாங்க. இப்படியிருந்த சூழல்லதான் கல்யாணமாகி ராஜபாளையம் போயிட்டாங்க. அதன்பிறகும் கூட ஊருக்கு வர்ற நேரமெல்லாம் ஊர்ல எல்லாரும் அவங்க மேல பிரியத்தோடதான் இருந்தோம். எம்.எல்.ஏ சீட் கிடைச்சப்பக் கூட அதிகமா சந்தோஷப்பட்டது நாங்கதான். அதேபோல ஜெயிச்சு அமைச்சர் பதவியும் கிடைச்சது.

அந்த நாள் பனைவிளை மக்கள் எல்லாருக்குமே அவ்வளவு மகிழ்ச்சி. இந்தப் பகுதிக்கு நிச்சயம் ஏதாவது செய்வாங்கனு நம்பினோம். வரவேற்பு விழாவெல்லாம் வச்சோம்.

ஆனா அடுத்த சில நாட்கள்தான் எங்களுக்கெலாம் அதிர்ச்சி தர்ற வேலையைச் செய்துட்டாங்க.

கிணறு
கிணறு

அதாவது எங்க ஊர்ல ஒரு கிணறும் அதைச் சுத்தி சுமார் 7 சென்ட் இடமும் இருக்கு. அந்தக் காலத்துல ஜெகதீஸ்வரி குடும்பத்தைச் சேர்ந்த அவங்க முன்னோர்கள் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஊருக்குத் தானமா கொடுத்ததா சொல்வாங்க. ஆதார டாகுமென்ட்டெல்லாம் இருக்கா தெரியலை. ஆனா ஊர்ல இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யும்போதும், காரியத்தின்போதும் இந்தக் கிணத்தையே ஊர் மக்கள் பயன்படுத்திட்டிருந்தாங்க. கிணத்தைப் பயன்படுத்தறது குறித்து யாரும் எதுவும் சொன்னதில்லை.

ஆனா சரியா இவங்க அமைச்சர் ஆகி பத்து நாள்கள்தாம் இருக்கும். திடீர்னு அவங்க ஆளுங்க சிலர் வந்து அந்தக் கிணற்றையும் பக்கத்துல இருந்த இடத்தையெல்லாம் சுத்தி கம்பி வேலி போட்டுட்டாங்க.

விசாரிச்சதுக்கு ஊருக்குனு எங்க முன்னோர் எழுதியெல்லாம் தரலை. அதனால இனிமே யாரும் இந்தக் கிணத்தைப் பயன்படுத்தக் கூடாதுனு சொல்லிட்டாங்க.

ஊர்ல உள்ள முக்கியப் பெரியவங்க சிலர் காலங்காலமா கிணற்றைப் பயன்படுத்தியது குறித்து மனுவா எழுதி பழைய பஞ்சாயத்து தலைவரையும் கூட்டிகிட்டுப் போய் பழைய மாதிரியே பயன்படுத்த அனுமதி கேக்கலாம்னு போனா, மனுவை வாங்கவே மறுத்துட்டாங்க.

அதனால இப்ப கிராம மக்கள் எல்லாருமே அமைச்சர் மேல வருத்தத்துலயும் கோபத்துலயும்தான் இருக்காங்க” என்கின்றனர் அவர்கள்.

அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் இது தொடர்பாக கேட்கலாமென அவரது உதவியாளரைத் தொடர்பு கொண்டோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. அவருக்கு விஷயத்தைச் சொல்லி வாய்ஸ் நோட் போட்டும் ரெஸ்பான்ஸ் இல்லை.

அமைச்சர் தரப்பில் பதில் தரப்படும் பட்சத்தில் ஆய்வுக்குப் பின் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்.!

Source link