அதற்கு முன்னதாக அவை கூடியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் சட்டமன்ற உறுப்பினர்கள் சுகாதாரத்துறை தொடர்பான கேள்விகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். அதற்கு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்தார். குறிப்பாக, பல்வேறு தொகுதிகளில் பாம்பு கடி சம்பவம் இருப்பதாகவும், இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை செய்து தருமாறும் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு உரிய பதிலை அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது முன்னாள் முதல்வரும் திமுக எம்.எல்.ஏவுமான ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, “கேள்வி நேரம் ஆரம்பிக்கப்பட்டு 29 நிமிடங்களாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பாம்பு கடியை பற்றி உரிய விளக்கத்தை தந்து கொண்டிருக்கிறார். அதனால் பல்வேறு தொகுதிகளில் பாம்பு கடி இருப்பதாக அறிய முடிகிறது. அந்த தொகுதிகளில் எல்லாம் நாக தோஷம் இருப்பதாக நான் அறிகிறேன். அந்த தோஷத்தை கழிப்பதற்கு ஏதாவது பிரார்த்தனை இருந்தால் அதை அமைச்சர் செய்ய வேண்டும்” என்று அவர் நகைச்சுவையாக சொல்ல சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏக்களும் சிரித்தனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், “முதல்வர் தலைமையிலான தமிழக அரசு அறிவியல் பூர்வமான அரசை தான் நாம் மேற்கொண்டிருக்கிறோம். அதனால் பில்லி, சூனியம், தோஷம் ஆகியவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கு அந்த நம்பிக்கை இருந்தால் அந்த தோஷத்தை மேற்கொள்ளலாம்” என்று தெரிவித்தார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், “அமைச்சர் விரும்பினால் தோஷம் கழிப்பதற்கு உரியவர்களை அனுப்பி வைப்பேன்” என்று கூற மீண்டும் சிரிப்பலை எழுந்தது.
இதையடுத்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “பெரியார் இயக்க திமுக இன்று, தோஷத்தைப் பற்றி பேசுகிறார்கள். நாங்கள் பெரியார் வழி வந்தவர்கள். அறிவியல்பூர்வமாக இந்த பிரச்சனையை நாங்கள் அணுகக்கூடியவர்கள்” என்று கூறினார். அதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் கேட்டது ஜலதோஷத்தைப் பற்றி தான். எங்களுடைய துணைத் தலைவர் கே.என்.நேருவுக்கு உண்மையாகவே ஜலதோஷம், அவருக்கு உடம்பு சரியில்லை. அதற்கும் ஒரு தீர்வு காண வேண்டும்” என்று கூறினார்.
