பழனி கோவில் சொத்து விற்பனை முறைகேடு தொடர்பாக சமூக வலைதளத்தில் அரசையும், அமைச்சர் ரமேஷையும் விமர்சித்து பதிவு வெளியிட்டதாக வினோத் சூரியகுமார் என்பவர் கடந்த 15-ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், ஜனநாயகத்தில் எதிர்கருத்துகளுக்கு உரிய மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும், அரசையோ அல்லது அமைச்சரையோ விமர்சிப்பதை அரசுக்கு எதிரான குற்றமாகவோ அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகவோ கருத முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். பழனி கோவில் சொத்து முறைகேடு தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே மனுதாரர் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அப்பதிவு நாட்டின் இறையாண்மைக்கோ அல்லது பாதுகாப்பிற்கோ எந்தவித அச்சறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றும், இது அவதூறு வரம்பிற்குள்ளேயே வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், கோவில் நிலம் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாகக் குறிப்பிடுவது இரு பிரிவினரிடையே விரோதத்தைத் தூண்டியதாகக் கருத முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 25,000 ரூபாய்க்கான சொந்த பிணை மற்றும் அதே தொகைக்கான இருநபர் பிணை செலுத்தப்பட வேண்டும் என்றும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மனுதாரர் தினமும் காலையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
