அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் : சீமான் சொன்ன முக்கிய தகவல்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த பதவி விலகலால் இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் விரைவில் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு அதிகாரப்பூர்வ இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதோடு, தன்னைப் பார்த்து தவெகவினர் ஏன் பயப்படுகிறார்கள் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “பொது வேட்பாளர்னா நான் எப்பவுமே பொது வேட்பாளர். அம்பாசமுத்திரத்தில் மட்டும் இல்ல, இன்னைக்கு எழுதி வச்சுக்கிருங்க, எப்பவுமே பொதுவேட்பாளர்  நான்  தான். ஒவ்வொரு சமூகத்திற்கு என இல்லாமல் எல்லாருக்கும் ஒரு வேட்பாளர் இருக்கிறார். அதான் நாம் தமிழர் கட்சி.

இந்துவுக்கு, முஸ்லிமுக்கு, கிறிஸ்தவருக்கு எல்லாருக்கும், ஆடு, மாடு, கோழி, நாய், நரி, கொக்கு, குருவி, மரம், செடி, கொடி, மலை, கடல் என எல்லாத்துக்கும் ஒருத்தன் இருக்கான். அதான் நாம் தமிழர் கட்சி. அதனுடைய வேட்பாளர்கள். நீ பொது வேட்பாளரா என்றால், ஆமாம் என்று தான் சொல்ல வேண்டும். எல்லாருக்கும் பொதுவாக இருக்கிற ஒரு கட்சி, ஒரு வேட்பாளர், அது நாம் தமிழர் கட்சி வேட்பாளர்தான். அதனை திமுக எற்கிறது, அல்லது ஏற்கவில்லை  அதுவல்ல கேள்வி. இவங்க எல்லாம் நோட்டாவுக்குக்கூட போடுங்க, சீமானுக்கு போடக்கூடாதுன்னு என்று சொன்னவர்கள் எல்லாம் உண்டு” எனத் தெரிவித்தார்.