உலக அளவில் எதிர்பார்க்கப்பட்ட இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, இந்த தேர்தலில் எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால், எந்த கூட்டணி ஆட்சியமைக்கும் என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
கடந்த அக்டோபர் 27 அன்று இஸ்ரேலின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (28-10-26) முதல் எண்ணப்பட்டு வருகின்றன. கிட்டதட்ட 3 -ல் 2 பங்குக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், ஆளும் கட்சியின் தலைமையிலான கூட்டணி, எதிர்க்கட்சியின் தலைமையிலான கூட்டணி என யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதாவது, மொத்தமுள்ள 120 தொகுதிகளில் ஆளும் கூட்டணிக்கு 53 இடங்களும், எதிர்க்கட்சி கூட்டணிக்கு 48 இடங்களும், அரபு கட்சி கூட்டணிக்கு 19 இடங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள வாக்குகள் எண்ணப்பட்டால் இந்த முடிவுகளில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், எந்த கூட்டணி ஆட்சியமைக்கவும், அரபு கட்சிகளின் உதவி தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அரபு (ராம்) கட்சி பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்க முயன்றதாகப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ’லிகுட்’கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அதாவது, அரபுக் கட்சியான ’ராம்’ கட்சிக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு விநியோகிக்க 24,000 இஸ்ரேலிய ஷெக்கல் பணம் வைக்கப்பட்டிருந்த கவர்களைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாக நெதன்யாகு குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இஸ்ரேலின் மத்திய தேர்தல் ஆணையம், இது ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடந்த தனிப்பட்ட சம்பவமே தவிர, நாடு தழுவிய அளவில் தேர்தல் முறைகேடுகள் அல்லது வாக்குச் சீட்டுகளில் முறைகேடு நடந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
