சிறுவயதில் நாம் ஏதேனும் விலை உயர்ந்த பொம்மையையோ பொருட்களையோ பெற்றோரிடம் கேட்டால், உடனே அம்மா சொல்லும் முதல் வார்த்தை “நம்ம வீட்டுப் பின்னாடி என்ன பணம் காய்க்கிற மரமா இருக்கு?” என்பது தான். ஆனால், நிஜமாகவே உடல் முழுவதும் ஆயிரக்கணக்கான நாணயங்களைத் தாங்கிக்கொண்டு, ‘பண மரமாக’ ஒரு மரம் நிற்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், ஸ்காட்லாந்து காடுகளில் உள்ள இந்த அதிசய மரங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
வெறும் ரூ.386-க்கு இவ்வளவு லக்சுவரியா? இந்தியாவை பார்த்து ஐரோப்பா வெட்கப்படணும்; மிரண்டு போன ஃபாரினர்
மரப் பட்டைகளில் புதைந்திருக்கும் நாணயங்கள்
ஸ்காட்லாந்தின் அடர்ந்த காடுகளுக்குள் சென்றால், உடம்பெல்லாம் நாணயங்களால் மூடப்பட்ட விசித்திரமான மரங்களைக் காணலாம். மரத்தின் பட்டைகளுக்குள் சுத்தியலால் நாணயங்கள் அடிக்கப்பட்டு, பார்ப்பதற்கே ஒரு மர்மமான கலை வடிவம் போலக் காட்சியளிக்கும். இப்பகுதி மக்கள் இந்த மரங்களை “காயின் ட்ரீஸ்” (Coin Trees) அல்லது “விஷ் ட்ரீஸ்” (Wishing Trees – ஆசைகளை நிறைவேற்றும் மரம்) என்று அழைக்கிறார்கள்.
நோய் தீர்க்கும் மரம் – 300 ஆண்டுகால நம்பிக்கை
இந்த மரங்களின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான வரலாற்று நம்பிக்கை ஒளிந்துள்ளது. 1700-களிலிருந்தே ஸ்காட்லாந்து மக்களிடம் இந்த பழக்கம் இருந்து வருகிறது. பழங்காலத்தில் மரங்களுக்குள் தெய்வீக சக்திகளும் ஆன்மாக்களும் வசிப்பதாக மக்கள் நம்பினர். தீராத நோயால் அவதிப்படும் ஒருவர், ஒரு நாணயத்தை எடுத்து மரத்தின் பட்டையில் சுத்தியலால் அடித்து வைப்பார். அப்படிச் செய்வதன் மூலம், மனிதனின் உடலில் உள்ள நோயை மரம் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மனிதனைக் குணமாக்கிவிடும் என்பது நம்பிக்கை.
திருடினால் ஆபத்து
மரத்தில் இருக்கும் நாணயத்தை யாராவது பேராசையோடு திருடினால், அந்த நாணயத்தில் இருக்கும் நோய்களும் தீய சக்திகளும் திருடியவரைச் சென்று தொற்றிக் கொள்ளும் என்ற பயம் இருந்தது. இதனால் பல நூற்றாண்டுகளாக இந்த நாணயங்களை யாரும் தொடுவதே இல்லை.
வேண்டுதல் நிறைவேற ‘ஹேமர்’ அடி
நோய்களைக் குணப்படுத்துவது மட்டுமின்றி, தங்களின் ஆசைகள் மற்றும் வேண்டுதல்கள் நிறைவேறவும் மக்கள் இந்த மரங்களைப் பயன்படுத்தினர். ஒரு நாணயத்தை எடுத்து மரத்தின் பட்டையில் கற்கள் அல்லது சுத்தியைக் கொண்டு பலமாக அடிப்பார்கள். அந்த நாணயம் மரத்தின் பட்டைக்குள் எவ்வளவு ஆழமாகப் பதிகிறதோ, அவ்வளவு சீக்கிரம் அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.
காலப்போக்கில் மரம் வளரும்போது, நாணயங்களைச் சுற்றிலும் மரத்தின் பட்டை வளர்ந்து, அந்த நாணயங்களை தனக்குள்ளேயே புதைத்துக் கொள்ளும். இதனால் பல நூறு வருடங்களுக்கு முந்தைய நாணயங்கள் கூட இன்று மரத்தோடு மரமாக உறைந்து போய் பணம் காய்க்கும் மரம் போல் காட்சியளிக்கின்றன.
