அயோத்தி ராமர் கோவில் சி.இ.ஓ.,வாக ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி நியமனம்

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் சி.இ.ஓ., எனப்படும், தலைமை நிர்வாக அதிகாரியாக, நம் விமானப்படையின் ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை, ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை திருடப்படுவதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், பணம், நகைகள் மாயமானது உறுதி செய்யப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. இதற்கிடையே, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது.

இந்த குழு, கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில், பக்தர்களின் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்கள் சிலர், பணத்தை திருடிச் சென்றது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக, எட்டு பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 80 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று, கோவில் அறக்கட்டளையின் பொதுச்செயலராக இருந்த சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் புதிய நிர்வாகிகளை நியமிக்க அறக்கட்டளை நிர்வாகம் முடிவு செய்தது.

நிர்வாக குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், கார்ப்ரேட் நிறுவனம் போல் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் நோக்கில் முழுநேர தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க அறக்கட்டளை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு நாடு முழுதும் இருந்து, 5,500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், நீதிபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள் விண்ணப்பித்தனர்.

அறக்கட்டளையின் உயர் மட்டக்குழு நடத்திய தீவிரப் பரிசீலனை மற்றும் நேர்காணலுக்குப்பின், நம் விமானப்படையின் ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா, கோவில் அறக்கட்டளையின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

இதேபோல், அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகளாக, அயோத்தியைச் சேர்ந்த மதன் மோகன் பாண்டே, டில்லியைச் சேர்ந்த மகேஷ் பக்சந்தா, உ.பி.,யின் ஷிகோஹாபாதைச் சேர்ந்த நிர்மல் யாதவ் ஆகிய மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யார் இந்த ஜிதேந்திர மிஸ்ரா? நம் விமானப்படையில், 38 ஆண்டுகள் சேவையாற்றிய ஜிதேந்திர மிஸ்ரா, 3,000 மணி நேரத்திற்கும் அதிகமான விமானப் பயண அனுபவத்தையும் பெற்றவர். ‘மிராஜ் – 2000’ ரகம் உட்பட 18 வகையான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை இயக்கும் திறன் படைத்தவர். விமானப்படையின் மேற்கு மண்டலப் பிரிவின் தலைவராகப் பணியாற்றி, கடந்த ஏப்ரலில் ஓய்வு பெற்றார். நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட, ‘கார்கில், ஆப்பரேஷன் சிந்துார்’ உள்ளிட்ட பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். இவரது சிறப்பான திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாடுகளை கவுரவிக்கும் வகையில், நம் நாட்டின் மிக உயரிய போர்க்கால சிறப்புமிகு சேவைக்கான, ‘சர்வோத்தம் யுத் சேவா பதக்கம்’ அளிக்கப்பட்டுள்ளது.

Source link