திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி வளாகத்திற்குள் வந்து, சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால், சமரச பேச்சுவார்த்தையின்போது பெற்றோர்களுக்கு இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இந்த வாக்குவாதம் மோதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதனிடையே, பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு மாணவிகள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. எட்டு மாணவிகளும் தற்காலிகமாக பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மாணவிகளின் ஒழுங்கீனமான நடவடிக்கையை கண்டித்த ஆசிரியர்கள், அவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, பள்ளியின் ஒழுங்கு மற்றும் மாணவிகளின் நடத்தை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, மாணவிகள் பள்ளிக்கு வெளியே சாலையோரம் நின்று பேசுவது, இரட்டம்பேடு சாலை மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மாணவிகள் ஒன்றாக இருப்பது தொடர்பாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவி வருகின்றன. இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், அதற்கு காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லாமல், இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகவே நடைபெற்றதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மாணவிகளுக்கு இடையிலான மோதலைத் தொடர்ந்து, அவர்களின் பெற்றோர்களும் பள்ளி வளாகத்திற்குள் வந்து ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
