அரசு சாட்சியை கொல்ல முயற்சி; உடந்தையாக இருந்த எஸ்.ஐ., சிக்கினார்

திருப்பூர்: அரசு சாட்சியை கொல்ல முயன்ற வழக்கு தொடர்பாக, சஸ்பெண்ட் எஸ்.ஐ.,யை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கணபதிபாளையத்தைச் சேர்ந்த தங்கவேல், 45, கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ஐகோர்ட் வக்கீல் முருகானந்தம் வழக்கில், புகார்தாரராகவும், முக்கிய அரசு சாட்சியாகவும் உள்ளார்.

கடந்த 7-ல் டூ – வீலரில் சென்ற அவரை, காரில் வந்த இருவர் அரிவாளால் வெட்டி தப்பினர். இந்த வழக்கில், பள்ளி தாளாளர் தண்டபாணியின் உறவினர் நந்தகுமார், 52, கூலிப்படையை ஏற்பாடு செய்த பாபு, 38, பணப்பட்டு வாடா செய்த தண்டபாணியின் மனைவி சரஸ்வதி, 55, சேலத்தை சேர்ந்த ஹேமா, 49, ஆகியோரை தாராபுரம் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.

இந்நிலையில், கொலை சதிக்கு உடந்தையாக இருந்ததாக திருநெல்வேலியைச் சேர்ந்த, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு போலீஸ் படை எஸ்.ஐ., சரவணன், 52, நேற்று கைது செய்யப்பட்டார்.

போலீசார் கூறுகையில், ‘முருகானந்தம் கொலை வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் இருந்த தண்டபாணிக்கும், வேறு வழக்கில் கைதாகி, அதே சிறையில் இருந்த எஸ்.ஐ., சரவணனுக்கும் ஏற்பட்ட பழக்கத்தில், இந் த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சரவணனிடம், விசாரணை நடை பெறுகிறது’ என்றனர்.

திருநெல்வேலியில், ஐ.டி., ஊழியர் கவின் செல்வகணேஷ் ஆணவக்கொலை வழக்கில், கைதான சுர்ஜித்தின் தந்தை தான் இந்த சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link