சென்னை: அரசு பஸ்களில் மொபைல் போனில் ‘ஹெட்போன்’ பயன்படுத்தாமல், அதிக சத்தத்துடன் ‘வீடியோ’ பார்க்கவும், பாடல்கள் கேட்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், பயணியர் பஸ் பயணத்தின் போது, அதிக சத்தத்துடன் ‘ரீல்ஸ்’ பார்ப்பது, பாடல் கேட்பது, ‘வீடியோ கேம்’ விளையாடுவது அதிகரித்துள்ளது; இது, சக பயணியருக்கு தொந்தரவை ஏற்படுத்தி வருகிறது.
இதை நடத்துநர்கள் கண்டித்தால், வாக்குவாதமாக மாறி விடுகிறது. எனவே, பயணியர் நலன் கருதி, மெட்ரோ ரயில்களில் இருப்பது போல், அரசு பஸ்களிலும், அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது, ‘ரீல்ஸ்’ போன்ற வீடியோ பார்ப்பதை தடை செய்ய வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து, நம் நாளிதழில், கடந்த 19ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழக போக்குவரத்து துறை செயலர் நிர்மல்ராஜ், அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் பிறப்பித்துள்ள உத்தரவில், பயணியர் சில விதிமுறைகளை பின்பற்ற, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அறிவுறுத்த வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார்.
அதன் விபரம்;
பஸ் பயணத்தின் போது, மொபைல் போனில் உரத்த குரலில் தொடர்ந்து பேசக் கூடாது
மொபைல் போனில் ஸ்பீக்கரை ஆன் செய்து பேசுவது, பாடல்கள் கேட்பது, ‘வீடியோ’ பார்ப்பது, முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்
‘ஹெட்போன், இயர்போன்’ அல்லது ‘ப்ளூடூத்’ சாதனங்களை பயன்படுத்தாமல், உரத்த ஒலியில் வீடியோ பார்ப்பது மற்றும் இசை கேட்பது கூடாது
மற்ற பயணியருக்கு எந்தவிதமான அசவுகரியமும் ஏற்படாத வகையில், மொபைல் போன்களை பயன் படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
