மதுரை: உடல்நலக்குறைவால் காலமான தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் 90, உடல் அவரது விருப்பப்படி மதுரை தத்தனேரி மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.
மதுரை ஞானஒளிவுபுரம் விசுவாசபுரியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, தியாகராஜன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.,க்கள் மதார் பதுருதீன், கோபிசன், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் புட்டுத்தோப்பு ரோட்டில் உள்ள அவரது மனைவி உடல் அடக்கம் செய்யப்பட்ட சி.எஸ்.ஐ., வெப் மெமோரியல் சர்ச்சிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு இறுதிச்சடங்கு பிரார்த்தனை நடந்தது. பின்னர் காலை 10:00 மணி அளவில் தத்தனேரி மயானத்திற்கு ஊர்வலமாக உடல் எடுத்துச்செல்லப்பட்டது.
அங்கு அமைச்சர்கள் விஸ்வநாதன், நிர்மல்குமார், கலெக்டர் நிஷாந்த், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ., முஸ்தபா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப் பட்டது.
அவரால் பெருமிதம் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா: பல ஆண்டுகள் அவரது அருகிலேயே பயணம் செய்துள்ளதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். ஒருபோதும் குறை சொல்லாதவர். மேடையில் பேசுவது போல் தான் வாழ வேண்டும் என்று வலியுறுத்துவார். தனக்கு கிடைக்கும் மரியாதை அனைத்து பேச்சாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தவர்.
அவர் வழி நடக்க வேண்டும் முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன்: ஆறுதல் தேடுபவர்களுக்கு அடைக்கலமாக, நம்பிக்கையளித்தவர். இளைய தலைமுறையினர் அவரது வழியில் நடக்க வேண்டும்.
நுால்கள் அரசுடைமை பட்டிமன்ற நடுவர் லியோனி: மதங்களை தாண்டி அனைத்து தரப்பினரின் அன்பை பெற்றவர். மதநல்லிணக்கத்திற்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டினார். அவரின் நுால்களை அரசுடைமையாக்க வேண்டும்.
புகழ் என்றும் மறையாது பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கர்: பட்டிமன்றத்தில் புதுமையை ஏற்படுத்தியவர். கிறிஸ்தவராக இருந்தாலும், மதுரை மீனாட்சியின் அருளைப் பெற்றவர். சொர்க்கத்தில் பட்டிமன்றம் நடத்த அவரை கடவுள் அழைத்துக்கொண்டார் என்று நினைக்கிறேன். அவரது புகழ் என்றும் மறையாது.
மணிமண்டபம் அமைக்கணும் நடிகர் மதுரை முத்து: சாலமன் பாப்பையா மதுரையின் மகுடம். அவருக்கு மதுரையில் மணிமண்டபம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருவிக்கு அவரது பெயர் மதுரை துணைமேயர் நாகராஜ்: அவரது வசித்த தெருவிற்கு சாலமன் பாப்பையா பெயரை சூட்ட மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இவ்வாறு கூறினர்.
