-நமது நிருபர்-
நம் நாட்டில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் தற்காலிக பணி அடிப்படையில் சேர்க்கப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு குஜராத், அசாம் உள்ளிட்ட பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. குஜராத் அரசு, ஜூலை 17ல் வெளியிட்ட அறிவிப்பில், ‘முன்னாள் அக்னிவீரர்களுக்கு மாநில அரசு வேலைகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்’ என, அறிவித்திருந்தது.
அசாம் முதல்வரான பா.ஜ.,வை சேர்ந்த ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அமைச்சரவையும் அசாம் போலீஸ், கமாண்டோ பட்டாலியன்கள், சிறைத்துறை, தீயணைப்புப் படை காவலர்கள், கலால் துறைகளில் கான்ஸ்டபிள் மற்றும் சமமான பதவிகளில் 12 சதவீத இடங்களை அசாமை சேர்ந்த அக்னிவீரர்களுக்கு ஒதுக்க முடிவு செய்தது.
இதை பின்பற்றி மஹாராஷ்டிராவில் மாநில அரசு வேலைகளில் அக்னிவீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அம்மாநில முதல்வர் பட்னவிஸ் முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
நாட்டுக்காக போராடும் அக்னிவீரர்களுக்கு மாநில அரசு வேலைகளில் ஒதுக்கீடு அளிக்க மஹாராஷ்டிரா அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன்படி விதிகளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, நம் மாநிலத்தை சேர்ந்த கடற்படையில் பணியாற்றும் 282 அக்னிவீரர்களை போலீஸ் கான்ஸ்டபிள்களாக நியமித்து ஆணை வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
