ரியாத்: சவுதி அரேபியா மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சவுதியின் முக்கிய விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவரையில் 2 இந்தியர்கள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கையாக சவுதிக்கு விமான சேவைகளை பல நாடுகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
சவுதியின் முக்கிய நகரங்களான ரியாத், தைப், யான்பு மீது ஹவுதி வீசிய இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளை, அந்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்தன.
முஸ்லிம்களின் புனித தலமான மெக்கா மீதும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால், அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. பல நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள், மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சில மணி நேரங்களில் அவசர கால எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும், பொதுமக்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறும், அவசர உதவிக்கு 911 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும், அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
