அரும்பாக்கம் மெட்ரோ ஸ்டேஷன் அருகே 7 மாடி.. சென்னை மெட்ரோவின் அடுத்த பிளான் இதுதான்.. இத்தனை வசதிகளா?

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்.. பயணிகளுக்கு மட்டுமல்ல, இனி வியாபாரத்துக்கும் முக்கிய இடமாகப் போகிறது. முக்கிய மெட்ரோ ஸ்டேஷன்கள் அருகே பெரிய வணிக வளாகங்கள் வர உள்ளன.. அதில் அரும்பாக்கத்துக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் பிளான் உள்ளது.. 7 மாடி கட்டிடம், கடைகள், ரெஸ்ட்டாரெண்ட்டுகள் என இன்னும் அங்கே என்னென்ன வரப்போகிறது தெரியுமா? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்..!!

சென்னை மெட்ரோ ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வரும் நிலையில், மெட்ரோ நிர்வாகம் இனி பயணிகள் மூலம் மட்டும் வருமானம் ஈட்டாமல், மெட்ரோ நிலையங்களைச் சுற்றியுள்ள இடங்களையும் பயன்படுத்தி வருமானத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக முக்கிய மெட்ரோ நிலையங்கள் அருகே பெரிய பெரிய வணிக வளாகங்கள் மற்றும் வணிக மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதன் ஒரு பகுதியாக, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் ஸ்டேஷன் அருகே 7 மாடி கொண்ட பிரம்மாண்டமான வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. ஏற்கனவே ஆலந்தூர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட மெட்ரோ நிலையங்களுக்கு அருகே வணிக வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன அல்லது அதற்கான பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.. இந்த லிஸ்ட்டில்தான் இப்போது அரும்பாக்கமும் இணைகிறது.

அரும்பாக்கம் மெட்ரோ நிலையத்தின் பின்புறம் உள்ள 17,872 சதுர அடி நிலத்தில் இந்த கட்டிடம் அமைய உள்ளது. மொத்தம் 34,206 சதுர அடி பரப்பளவில் 7 மாடிகளுடன் கட்டப்பட உள்ள இந்த வளாகத்தில் அலுவலகங்கள், கடைகள் மற்றும் ரெஸ்ட்டாரெண்ட்டுகள் அமைக்க வாய்ப்பு உள்ளது.

இந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸுக்கு வரும் வாகனங்களால் டிராபிக் ஏற்படாமல் இருக்க, அடித்தளம் மற்றும் தரைத்தளத்தில் 4 அடுக்குகள் கொண்ட பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட உள்ளது. இதில் மெஷின் உதவியுடன் கார்களை வெவ்வேறு இடங்களுக்கு நகர்த்தி நிறுத்தும் வசதி இருக்கும். இந்த இடம் ஒரு பக்கம் ஜவஹர்லால் நேரு சாலையையும், இன்னொருபக்கம் கூவம் நதியையும் ஒட்டி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகளும் இருப்பதால், இந்த வணிக வளாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் பாதைக்கு அருகிலுள்ள தங்களுக்கு சொந்தமான நிலங்களை பயன்படுத்தி கூடுதல் வருமானம் பார்க்க சென்னை மெட்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்தின் 3, 4, 5-ம் பாதைகளை ஒட்டி மட்டும் சுமார் 12 லட்சம் சதுர அடி பரப்பளவில் வணிக மையங்கள் உருவாக்கப்பட உள்ளன.

இதற்கான வேலைகள் இப்போது மந்தைவெளி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இதுபோக, செம்பியம், பெரம்பூர் பேரக்ஸ், புரசைவாக்கம், சேத்பட், போட் கிளப், கச்சேரி சாலை, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வணிக மையங்கள் வர உள்ளன.

ஆனால், இங்கே ஒரு சின்ன சிக்கலும் இருக்கிறது. முதல் கட்ட மெட்ரோ திட்டத்தில் சில நிலையங்களுக்கு அருகே கட்டப்பட்ட வணிக வளாகங்களுக்கு மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. இதனால் அந்த வளாகங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த 2-ம் கட்ட மெட்ரோ பணிகள் முடிந்து சென்னை நகரின் பல பகுதிகளும் மெட்ரோ மூலம் இணைக்கப்பட்டால், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது இந்த வணிக மையங்களுக்கும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று மெட்ரோ நிறுவன முன்னாள் இயக்குநர் ராமநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதேபோல, வணிக வளாகங்கள் வந்துவிட்டால் அங்கு சொந்த வாகனங்களில் வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகலாம்.. அதனால் டிராபிக் ஏற்படாமல் இருக்க போதுமான பார்க்கிங் வசதி இருக்க வேண்டும். வாகனங்கள் எளிதாக உள்ளே வந்து வெளியே செல்ல தனி வழிகளும் அமைக்கப்பட வேண்டும் என்று நகர்ப்புற திட்டமிடல் வல்லுநர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில், மெட்ரோ ஸ்டேஷன் அருகே கடைகள், ரெஸ்ட்டாரெண்ட்டுகள், அலுவலகங்கள் என பொதுமக்களுக்கு புதிய வசதிகள் கிடைக்க உள்ளன. அதே நேரத்தில் மெட்ரோ நிறுவனத்துக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும். 2-ம் கட்ட மெட்ரோ முழுமையாக பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இந்த வணிக மையங்கள் சென்னையின் வர்த்தக வளர்ச்சிக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.