அலாஸ்கா கடலில் கவிழ்ந்த படகின் மீது 2 நாட்கள் அமர்ந்திருந்து உயிர் தப்பிய 15 வயது சிறுவன்

பட மூலாதாரம், Reuters

எழுதியவர், கிரேஸ் எலிசா குட்வின்

பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அலாஸ்காவின் பெரிங் கடலின் கடும் குளிரான நீரில் கவிழ்ந்த படகின் மீது சுமார் 2 நாட்கள் அமர்ந்திருந்த 15 வயது சிறுவன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தினர் டெரெக் பார்க்கர் அக்னாங்கா என அடையாளம் தெரிவித்துள்ள அந்தச் சிறுவன், அந்தப் படகில் இருந்தவர்களில் உயிர் பிழைத்த ஒரே நபர் ஆவார். இந்தச் சம்பவத்தில் அவரது மூத்த சகோதரரும், உறவினர் ஒருவரும் உயிரிழந்தனர்.

அந்த மூவரும் செப்டம்பர் 4, வெள்ளிக்கிழமை அன்று செயின்ட் லாரன்ஸ் தீவில் இருந்து புறப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்குள் அவர்கள் திரும்பியிருக்க வேண்டும் என்று அமெரிக்க கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

ஆனால், 18 அடி நீளமுள்ள மீன்பிடிப் படகு திரும்பி வராததால், கடலோரக் காவல்படை தேடுதல் பணியைத் தொடங்கியது.

திங்கள்கிழமை காலை, கடலோரக் காவல்படையின் விமானக் குழுவினர் கவிழ்ந்த படகின் மீது சிறுவன் அமர்ந்திருப்பதைக் கண்டனர். இந்தநிலையில் அருகில் வந்த கப்பலில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றார்.

படகு கவிழ்ந்து உடன் வந்தவர்கள் உயிரிழக்க, கவிழ்ந்த படகின் மீது 2 நாட்கள் அமர்ந்து உயிர் தப்பிய 15 வயது சிறுவன்

பட மூலாதாரம், Carlos alexis escartin

அந்தப் படகில் இருந்த சிறுவனின் இரண்டு உறவினர்களின் உடல்களையும் அந்த மீன்பிடி கப்பல் மீட்டது.

“இந்த இரண்டு மீனவர்களின் துயரமான இழப்பால் பாதிக்கப்பட்ட அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அமெரிக்க கடலோரக் காவல்படையின் ஆர்க்டிக் பிரிவின் தளபதி ரியர் அட்மிரல் பாப் லிட்டில் கூறினார்.

சிறுவன் மீட்கப்பட்டபோது, அவருக்கு ஹைப்போதெர்மியா (உடல் வெப்பநிலை குறைதல்) அறிகுறிகள் இருந்ததாக அமெரிக்க கடலோரக் காவல்படை தெரிவித்தது.

அக்னாங்காவை பாதுகாப்பாக மீட்ட மீன்பிடி கப்பலின் கேப்டன் ஆடம் வைட், உள்ளூர் அங்கரேஜ் செய்தி நிறுவனத்திடம், அந்தச் சிறுவன் இருள் சூழ்ந்த நிலையிலும், சுமார் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட கடல் நீரிலும், சிறிய படகைப் பற்றிக்கொண்டு உயிர் பிழைத்ததாகக் கூறினார்.

“அவன் மிகவும் தைரியமான சிறுவன்” என்று வைட் கூறினார்.

“அவனுடைய பற்கள் நடுங்கிக்கொண்டிருந்தபோதும், அவனது சகோதரர் இன்னும் அந்தப் படகுக்கு அடியில் இருப்பதாகக் கூறினான். நாங்கள் இச்சிறுவனை மீட்பதற்கு முந்தைய இரவில், தனது உறவினர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாகக் கூறினான்” என்று வைட் தெரிவித்தார்.

சனிக்கிழமை அவர்களது மீன்பிடிப் படகு கவிழ்ந்தது. இதனால் அக்னாங்கா கடலில் இரண்டு நாட்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் இருந்ததாக அவரது தாய் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அக்னாங்கா மற்றும் அவரது மூத்த சகோதரரின் தாயான வீனா குலோவியி, தனது மகன்கள் தங்களுக்குப் பிடித்த வேலையை செய்துகொண்டிருந்ததாகக் கூறினார்.

சவூங்கா பகுதியில் உள்ள மக்களுக்கு அங்குள்ள கடைகளில் எப்போதும் இறைச்சி கிடைக்காத சூழலில் அவர்களுக்கு மீன்பிடித்து உணவு வழங்குவதே அவர்களது நோக்கமாக இருந்ததாக அவர் கூறினார்.

படகு கவிழ்ந்து உடன் வந்தவர்கள் உயிரிழக்க, கவிழ்ந்த படகின் மீது 2 நாட்கள் அமர்ந்து உயிர் தப்பிய 15 வயது சிறுவன்

பட மூலாதாரம், Carlos alexis escartin

அலாஸ்கா கடற்கரைக்கு அப்பால் உள்ள செயின்ட் லாரன்ஸ் தீவில் அமைந்துள்ள சவூங்கா என்ற கிராமத்தில் சுமார் 800 பேர் வசிக்கின்றனர். இங்கு பெரும்பாலும் சைபீரியன் யூபிக் மக்கள் வசிக்கின்றனர். ஆங்கிலமும் செயின்ட் லாரன்ஸ் தீவு யூபிக் மொழியும் இத்தீவின் முக்கிய மொழிகளாக உள்ளன.

“எனது மகன்கள் மற்றவர்களுக்கு உணவு வழங்குபவர்களாக வளர்க்கப்பட்டவர்கள். இது தலைமுறை தலைமுறையாகத் தொடரும் ஒரு பாரம்பரியம்” என்று குலோவியி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

“நாங்கள் வேட்டையாடுகிறோம், குடும்பங்களுக்கு உணவு வழங்குகிறோம், சமூகத்தினருடன் பகிர்ந்துகொள்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது உயிர் பிழைத்த மகன் தற்போது வீட்டில் குணமடைந்து வருவதாக குலோவியி கூறினார்.

“எனது உயிர் பிழைத்தவன்” என்று அவர் பதிவிட்டுள்ளார். “அவனுடைய கதை ஆச்சரியமானது. அந்த முழு நேரத்திலும் அவன் ஒருபோதும் பயப்படவில்லை.”

அச்சிறுவன் “முழு நேரமும் பிரார்த்தனை செய்துகொண்டே” இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link