வீட்டு மின் நுகர்வோருக்கு எதிர்பாராமல் எகிறும் மின் கட்டண அதிர்ச்சியைக் குறைக்கவும், தவறான மீட்டர் கணிப்புகளைத் தவிர்க்கவும், முந்தைய மாதத்தைக் காட்டிலும் 20% மேல் பயன்பாடு உயர்ந்தால் நேரடியாக அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வுக்கு உட்படுத்தும் புதிய சரிபார்ப்பு நடைமுறையைத் தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் அமல்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மின் நுகர்வோரின் மின் பயன்பாடு முந்தைய இருமாதக் கட்டணக் சுழற்சியைக் காட்டிலும் 20 சதவீதம் வரை அதிகரித்தால், மின் கட்டணப் பட்டியல் உருவாகுவதைத் தற்காலிகமாகத் தடுத்து, அதை நேரடியாகச் சென்று ஆய்வு செய்த பின்னரே கட்டணத்தைப் பிறப்பிக்கத் தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் (TNPDCL) புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.
இப்புதிய சுற்றறிக்கையின்படி, கடந்த ஜூலை அல்லது ஆகஸ்ட் 2026 மாதங்களில் 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்திய வீடுகளை ‘எல்.டி பில்லிங் சாஃப்ட்வேர்’ (LT billing software) அடையாளம் காணும். இந்த வீடுகளுக்குச் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதக் கட்டணம் முந்தைய கட்டணத்தை விட 20 சதவீதம் அதிகமாக இருந்தால், கட்டணப் பட்டியல் உருவாக்கப்படுவது தடுக்கப்பட்டு, மறுபரிசீலனைக்கு அனுப்பப்படும்.
மீட்டர் விவரங்களைப் பதிவு செய்த நாளிலிருந்து 3 வேலை நாட்களுக்குள் அதிகாரிகள் இந்த நேரில் சென்று ஆய்வு செய்யும் பணியை முடிக்க வேண்டும். கூடுதல் கட்டணத்தின் அளவுக்கு ஏற்ப ஆய்வுகளை மேற்கொள்ளும் அதிகாரிகளின் பொறுப்புகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன:
ரூ. 1,000 வரை உயர்வு: அசஸ்மென்ட் இன்ஸ்பெக்டர் அல்லது வருவாய் மேற்பார்வையாளர் (Revenue Supervisor).
ரூ. 1,001 முதல் ரூ. 2,000 வரை: வருவாய்ப் பிரிவு உதவி சூப்ரண்டென்ட்.
ரூ. 2,001 முதல் ரூ. 5,000 வரை: உதவி கருவூல அதிகாரி.
ரூ. 5,001 முதல் ரூ. 10,000 வரை: உதவி கணக்கு அதிகாரி.
ரூ. 10,000-க்கும் மேல் உயர்வு: துணைப் பிரிவு உதவி செயற்பொறியாளர் (AEE).
ஆய்வின் போது தவறான கணக்கீடு கண்டறியப்பட்டால் அன்றைய தினமே அல்லது அடுத்த வேலை நாளில் திருத்தப்பட்டுச் சரியான கட்டணம் பிறப்பிக்கப்படும்; மீட்டர் அளவு சரியாக இருக்கும் பட்சத்தில் வழக்கம் போல் கட்டணம் உருவாக்கப்படும். ஆய்வுக்குப் பின்பும் நுகர்வோருக்குப் பயன்பாட்டு அளவில் முரண்பாடு இருப்பதாகத் தோன்றினால், ‘CMRI Data’ மூலம் மீட்டரைப் பரிசோதிக்கக் கோரலாம்; ஆனால், அவர்கள் அதற்குள் உரியக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பின்னர் தவறுகள் இருப்பின் அடுத்தக் கட்டணத்தில் சரிசெய்யப்படும்.
அதேவேளையில், கேபிள் அல்லது ப்ளூடூத் மொபைல் ஆப் மூலம் தானியங்கி முறையில் (Automatic metering) எடுக்கப்படும் அளவீடுகளுக்கு இந்த மறுஆய்வு முறை பொருந்தாது. தவறுதலாக அளவீடு எடுக்கும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் இந்தச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
