சென்னை: திருவள்ளூரில் நிருபர்கள் சந்திப்பில், திமுக கவுன்சிலரின் அநாகரிக பேச்சுக்கு சபாநாயகர் பிரபாகர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சபாநாயகர் என்ற அடிப்படையில் சட்டசபையில் இது குறித்து நான் பேசும்போது ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்; யாரும் யாரைப் பற்றி பேசுவதற்கு முன்னாடி அல்லது பேசியதற்கு பிறகு, நான் பேசியது சரிதானா என்று உங்கள் வீட்டில் இருக்கிற மனைவி, தாய், தந்தையர் பெண்களிடம் கேட்டுப் பாருங்கள்.
நீங்கள் பேசியது சரிதான் என்று சொன்னால் அதனை உங்கள் மனசாட்சிக்கு விட்டு விடுங்கள் என்று சொன்னேன். அதை தான் மீண்டும் சொல்கிறேன்.
எந்த கட்சியாக இருந்தாலும், அவதூறு பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும். முன்னுதாரணமாக நான் ஒன்று சொல்வேன். எவ்வளவு கண்ணியம் மிக்கவராக முதல்வர் விஜய் இருக்கிறார் என்பதை நாம் சட்டசபையில் பார்த்தோம்.
தவெக எம்எல்ஏ ஒருவர் கருணாநிதியின் பெயரை சொல்லி சட்டசபையில் பேசி விட்டார். அதற்கு எதிர்ப்பு வந்தது. உடனே முதல்வர் விஜய் எழுந்து அவர் சார்பாக நான் சாரி கேட்கிறேன் என்று சொன்ன அந்தப் பண்பு பாராட்டக்கூடியதாக இருக்கிறது.
பேசும்போது அனைவரும் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். அதுதான் தமிழர்களின் பண்பாடு; நிச்சயமாக அதை எல்லா கட்சிகளும் பின்பற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
மழை வெள்ளத்தை பற்றி கேட்டீர்கள்; தமிழக அரசு முதல்வர் விஜயின் ஆணையை ஏற்று, எங்கு எல்லாம் மழை அதிகமாக பொழிந்ததோ, நிவாரண பணிகளை முடுக்கி விட்டது. சென்னையில் பெய்ந்த கனமழையில் பாதிப்பு ஏற்பட்ட சில இடங்களிலும், உடனடியாக நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இரவில் பெய்த மழைநீர் காலையில் காணாமல் போனது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மழைநீர் எங்கும் தேங்காாமல், தேங்கிய நீரை உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்கள் மனதில் மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பதை நான் வரும் வழியில் பார்த்தேன். இந்தப் பணி பாராட்டுக்குரிய ஒன்று. இவ்வாறு சபாநாயகர் பிரபாகர் கூறினார்.
