சிந்தூர் நடவடிக்கைக்கு பின் முதல்முறையாக… டெல்லியில் நடைபெறும் எஸ்.சி.ஓ கூட்டத்திற்கு பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு

எழுதியவர்:Shubhajit Roy

இந்தியாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) நாகரிக உரையாடல் மன்றத்தில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தானின் தேசிய பாரம்பரிய மற்றும் கலாச்சார அமைச்சர் ஔரங்கசீப் கான் கிச்சிக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த கூட்டம் வரும் நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் நடைபெறவுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ‘சிந்தூர் நடவடிக்கை’ என்ற பெயரில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ராணுவ மோதல்களுக்குப் பிறகு, பாகிஸ்தானின் மூத்த அமைச்சர் ஒருவருக்கு இந்தியா அழைப்பு விடுப்பது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்னதாக, மே 2023-இல் பாகிஸ்தானின் அன்றைய வெளியுறவு அமைச்சராக இருந்த பிலாவல் பூட்டோ, கோவாவில் நடைபெற்ற எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா வந்ததே, பாகிஸ்தான் மூத்த அமைச்சர் ஒருவர் இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி நிகழ்வாகும்.

எஸ்சிஓ நாகரிக உரையாடல் மன்றத்தை நடத்துவடற்கு இந்தியா விருப்பம் தெரிவித்திருந்ததால், அந்த அமைப்பில் உள்ள அனைத்து உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டிய கடமை டெல்லிக்கு உள்ளது. அதன் அடிப்படையிலேயே பாகிஸ்தான் அமைச்சருக்கு இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள எஸ்சிஓ தலைவர்கள் உச்சிமாநாட்டை பாகிஸ்தான் நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், இதற்கான ராஜதந்திர நடவடிக்கைகள் மிகத் தெளிவாக வரைறுக்கப்பட்டுள்ளன. கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பதான்கோட் மற்றும் உரி தாக்குதல்களுக்குப் பிறகு, பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவுகளை கடந்த பத்தாண்டு காலமாக இந்தியா முடக்கி வைத்துள்ள போதிலும், சர்வதேச மற்றும் பலதரப்பு அமைப்புகளின் தளங்களில் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட வேண்டிய சூழல் நிலவுகிறது.

வரும் நவம்பர் மாதத்தில் டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களில் ஒன்றில் நடத்தப்படவுள்ள இந்த நாகரிக உரையாடல் தொடர்பான முன்மொழிவை, கடந்த 2025 செப்டம்பர் மாதம் டியான்ஜின் நகரில் நடைபெற்ற எஸ்சிஓ அரசுத் தலைவர்கள் உச்சிமாநாட்டின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதன்முதலில் முன்வைத்தார். தொடர்ந்து, 2026 அக்டோபர் 20 அன்று தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெற்ற 25-வது எஸ்சிஓ அரசுத் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த நிகழ்வை இந்தியா நடத்தும் என்பதை முறைப்படி அறிவித்தார்.

யூரேசிய உறுப்பு நாடுகளிடையே மக்களுக்கிடையேயான தொடர்புகளையும் கலாச்சார ஈடுபாட்டையும் வலுப்படுத்துவதும், பண்டைய நாகரிகங்களின் பகிரப்பட்ட பாரம்பரியம், கலை, இலக்கியம் மற்றும் கலாச்சார முறைகளை உலகிற்கு எடுத்துக்காட்டுவதுமே இதன் முக்கிய நோக்கங்களாகும்.

எஸ்சிஓ அமைப்பின் கீழ் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான இந்த தொடர்பு கடந்த மாதம் தொடங்கியது. அப்போது இந்திய உயர் அதிகாரி ஒருவர் இஸ்லாமாபாத்திற்கு பயணம் மேற்கொண்டு, “பிராந்திய தொடர்பு, போக்குவரத்து மற்றும் வர்த்தகம்” ஆகிய முக்கிய விஷயங்கள் குறித்து வலியுறுத்தினார்.

அழைப்பிற்கான பின்னணி:

இஸ்லாமாபாத்தின் பயங்கரவாத ஆதரவு கொள்கை காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு உறவுகள் கடந்த பத்தாண்டுகளாக முடங்கியுள்ளன. மேலும், 2019-ஆம் ஆண்டில் இரு நாடுகளும் தங்களது உயர் ஆணையர்களை திரும்பப் பெற்றதை அடுத்து உறவுகள் மேலும் தளர்வடைந்தன. இருப்பினும், எஸ்சிஓ போன்ற பலதரப்பு அமைப்புகளில் இரு நாடுகளும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எஸ்சிஓ நிகழ்வை நடத்தும் நாடு என்ற முறையில், பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்க வேண்டிய கடமை டெல்லிக்கு உள்ளது. அதேபோல, அடுத்த ஆண்டு எஸ்சிஓ உச்சிமாநாட்டை பாகிஸ்தான் நடத்தவுள்ளது.

இந்த அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளரான அலோக் திம்ரி, பாகிஸ்தானின் அரசுத் தொலைக்காட்சியான பிடிவி-க்கு அளித்த பேட்டியில், கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவைக் கடந்த பிறகு எஸ்சிஓ தற்போது அண்டை நாடுகளுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். இதன் முந்தைய இரண்டு உச்சிமாநாடுகள் பிஷ்கெக் (கிர்கிஸ்தான்) மற்றும் டியான்ஜின் (சீனா) ஆகிய இடங்களில் நடைபெற்றன.

மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியான திம்ரி, இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற எஸ்சிஓ தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் இந்திய தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார். எஸ்சிஓ உறுப்பு நாடுகளிடையே நாகரிக உரையாடலை நடத்த பிரதமர் மோடி முன்மொழிந்ததை நினைவுகூர்ந்த அவர், அந்த மாநாடு நவம்பர் 20 அன்று புதுடெல்லியில் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“இது யூரேசிய மற்றும் ஆசிய நிலப்பரப்பின் உறுப்பு நாடுகள் எஸ்சிஓ என்ற ஒரே தளத்தில் இணைந்து பயணிக்கும் ஒரு பயணமாகும்” என்று அவர் குறிப்பிட்டார். எஸ்சிஓ அமைப்பில் ரஷ்யா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

பாகிஸ்தானில் நடைபெற்ற எஸ்சிஓ கூட்டத்தில் இந்திய தூதுக்குழு பங்கேற்றது கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு, 2024 அக்டோபர் மாதம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், எஸ்சிஓ அரசுத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இஸ்லாமாபாத் சென்றிருந்தார். அந்தப் பயணத்தின் போது, எஸ்சிஓ அமைப்பின் வழிமுறைகளின்படி பாகிஸ்தானின் மூத்த தலைவர்களை ஜெய்சங்கர் சந்தித்திருந்தார்.

Source link