சென்னை: சென்னை துறைமுகம் தொகுதியில், 10,000 ரூபாய்க்கான ‘டோக்கன்’ வினியோகம் தொடர்பாக, போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
சென்னை துறைமுகம் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் மனோகர் சார்பில், வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்படும், ‘கியூ ஆர்’ குறியீடு பொறிக்கப்பட்ட 10,000 ரூபாய்க்கான டோக்கன்களை பறிமுதல் செய்து, தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த உத்தரவிட கோரி, சென்னை அண்ணாநகரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அவர் மனுவில், ‘தேர்தலில் வெற்றி பெற்ற பின், டோக்கன்களை பயன்படுத்தி, பணம் பெற்று கொள்ளுமாறு, ஒவ்வொரு வீடாக அ.தி.மு.க.,வினர் தெரிவித்து வருகின்றனர்’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
தேர்தல் கமிஷன் தரப்பில், வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் ஆஜராகி, ‘“புகார்கள் பெறப்பட்டதும், இரண்டு முறை சம்பவ இடத்துக்கு பறக்கும் படையினர் சென்று சோதனை நடத்தினர்; அங்கு எதுவும் கண்டறியப்படவில்லை. தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின்படி, காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. தேர்தல் கமிஷன் தொடர்ந்து கவனித்து வருவதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
இதைப்பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
தி.மு.க.,வினர் வினியோகிக்கும் 8,000 ரூபாய் டோக்கனுக்கு பதிலடியாக, 10,000 ரூபாய் டோக்கன்கள் மற்றும் காசோலை வடிவங்களை, அ.தி.மு.க.,வினர் வினியோகம் செய்து வருகின்றனர். இரு கட்சியினரும், இது தொடர்பாக, மாறி, மாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பிராட்வே, பிடாரி கோவில் தெருவில், கடந்த 15ம் தேதி அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள், 10,000 ரூபாய் டோக்கன் கொடுத்ததாக, புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் பறக்கும் படையினர் விசாரித்ததில் டோக்கன் சிக்கவில்லை. எனினும் முத்தியால்பேட்டை போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
