கோவை வெள்ளலூர் பகுதியில் முதியவரிடம் சாமர்த்தியமாக பேச்சுக் கொடுத்து 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற கல்லூரி காதலர்கள் இருவரை போத்தனூர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி மாலை, வெள்ளலூர் கறிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே சரஸ்வதி என்ற முதியவர் தனது உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மாஸ்க் அணிந்த இளைஞர் ஒருவர் அங்கு வந்து, “அருகில் உள்ள கிளினிக் எப்போது திறக்கும்?” எனக் கேட்டுள்ளார். சரஸ்வதியும் சுதாரித்துக் கொண்டு, “தினமும் 5 மணிக்குத் திறப்பார்கள், இன்று இன்னும் வரவில்லை” எனக் கூறியுள்ளார்.
அடுத்து, மருத்துவரின் வீடு எங்குள்ளது எனக் கேட்டு, சரஸ்வதி தெற்கு திசையை நோக்கிக் கை காட்டிய அந்தச் சில நொடிகளில், இளைஞரின் கை சரஸ்வதியின் கழுத்திலிருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை மின்னல் வேகத்தில் பற்றி இழுத்தது. நிலைகுலைந்து சரஸ்வதி கீழே விழ, அந்த நபர் அங்கு தயார் நிலையில் இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறித் தப்பினார்.
சிசிடிவி கேமரா தந்த அதிர்ச்சித் திருப்பம்:
இச்சம்பவம் குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட, மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான சிசிடிவி காட்சிகளைப் போலீசார் சல்லடை போட்டு ஆய்ந்தனர். அதில் ‘TN 99 AD 4548’ என்ற எண் கொண்ட டிவிஎஸ் ஜூபிடர் வாகனம் சங்கிலி பறிப்பில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
அந்த வாகனத்தின் வழித்தடங்களைத் தொடர்ந்து கண்காணித்த போது, போலீசாருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. குற்றத்தில் ஈடுபட்டது வேறு யாரும் இல்லை; கல்லூரியில் படிக்கும் காதல் ஜோடிதான் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
கடனை அடைக்கவும், ஜாலியாக வாழவும் திட்டம்:
கல்லூரி மாணவனுக்கு இருந்த கடனை அடைக்கவும், இருவரும் சேர்ந்து ஆடம்பரமாகச் சுற்றித் திரியவும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வெள்ளலூர் பகுதியில் தனியாகவோ அல்லது முதியவர்களாகவோ இருக்கும் பெண்களை நோட்டமிட்டு வந்துள்ளனர். சம்பவத்தன்று மாணவி வாகனத்தை இயக்கத் தயாராக நிறுத்த, மாணவன் மாஸ்க் அணிந்து சென்று சரஸ்வதியிடம் பேச்சுக் கொடுத்து கவனத்தைத் திசைதிருப்பிச் சங்கிலியைப் பறித்தது விசாரணையில் உறுதியானது.
சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் முதலில் கல்லூரி மாணவியைக் கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின்படி கே.ஜி. சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தலைமறைவாக இருந்த மாணவனையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 4 பவுன் தங்கச் சங்கிலி, டிவிஎஸ் ஜூபிடர் டூவீலர், 2 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆடம்பர ஆசைக்காகக் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்த இந்த இளம் ஜோடியின் செயல் கோவை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போத்தனூர் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
