தமிழ்நாடு அரசு இன்று (27.10.2026) வெளியிட்டுள்ள அரசாணையின்படி, சென்னை பெருநகர பகுதி மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளில் இயக்கப்படும் ஒப்பந்தப் பயண ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான பயணக் கட்டணங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, மாநில மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகார அமைப்புகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி இந்த அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.
இப்புதிய கட்டண மாற்றத்தின்படி, ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச தூரம் 1.8 கிலோமீட்டராக நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச தூரத்தைக் கடந்த பிறகு பயணிக்கும் ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான மலைப் பாதை கட்டணம் (Ghat Fare), சாதாரண குறைந்தபட்ச கட்டணத்தைப் போல 1.2 மடங்கு அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி மலைப் பாதைகளுக்கான குறைந்தபட்ச அடிப்படை கட்டணம் 60 ரூபாயாக இருக்கும். மேலும், மலைப் பாதைகளில் கூடுதல் தூரம் பயணிக்கும் போது ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 30 ரூபாய் வசூலிக்கப்படும்.
இரவு நேரப் பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்களுக்குக் கூடுதல் கட்டணம் பொருந்தும் என இந்த அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பயணிக்கும் போது, சாதாரண நேரக் கட்டணத்தைப் போல 1.5 மடங்கு (ஒன்றரை மடங்கு) கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். பயணத்தின் போது காத்திருப்பு நேரத்திற்கான கட்டணமாக ஒவ்வொரு 1 நிமிடத்திற்கும் 1 ரூபாய் வீதம் வசூலிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
