ஆந்திரா, ஒடிசாவை மிரட்டும் அர்னாப் புயல்: மக்கள் பாதுகாப்பாக இருக்க வானிலை மையம் அறிவுரை

– நமது நிருபர் –

மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய வங்க கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு புயலாக உருவெடுத்தது. இது ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகர்கிறது. நாளை( அக்டோபர் 28) காலை பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஆந்திரா மற்றும் ஒடிசாவின் தெற்கு கடலோர பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் பலத்த மழை பெய்கிறது. ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கின்றன. மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

அச்சுறுத்தல்

இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: மிகத் தீவிரமான புயலாக அர்னாப் உருவெடுத்துள்ளது. புயல் நெருங்குவதால், ஆந்திராவின் கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு ஒடிசாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அனைவரும் விழிப்புடன், பாதுகாப்பாக இருக்க வேண்டும். வீட்டிலேயே இருப்பதுடன், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். அவசர கால பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள், உணவு மற்றும் குடிநீர் தயாராக வைத்திருங்கள். அதிகாரப்பூர்வ வானிலை எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் எனக்கூறியுள்ளது.

தயார்

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கை: அர்னாப் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். 28 ம் தேதி புயல் கரையை கடக்கும் நிலையில், அதற்கான முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினத்தில் பாதுகாப்பு நடைமுறை மற்றும் விரைவாக மீட்புப்பணியில் ஈடுபடுவதற்கான பணிகள் தயாராக உள்ளன.

24 மணி நேரமும் நிலைமையை கண்காணிக்க வார் ரூம் செயல்படுகிறது. நிவாரண பொருட்களுடன் மீட்பு வாகனங்கள் தயார். டீசல் , மின்சாதன பொருட்கள், ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன. சாலைகளில் விழும் மரங்களை வெட்டவும், சீரமைப்புக்கு தேவையான கருவிகளும் தயாராக உள்ளது.

காற்றின் வேகம் மற்றும் நீர்மட்டம் ஒவ்வொரு மணி நேரமும் சரிபார்க்கப்படுகிறது.மூத்த அதிகாரிகள் களத்தில் உள்ளனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Source link