ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை விரிவுபடுத்த அரசு திட்டம்

ராசிபுரம்: ”ஆன்லைன் பத்திரப்பதிவு முறை மேலும் விரிவுபடுத்தப்படும்,” என, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறினார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, சென்னை மாகாண முன்னாள் முதல்வர் சுப்புராயன் மணிமண்டபம் உள்ளது.

நேற்று, அவரது பிறந்தநாளை முன்னிட்டு, மார்பளவு சிலைக்கு, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மாலை அணிவித்தார்.

அப்போது, அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

பத்திர பதிவுத்துறையை முன்னேற்றுவதற்கு, தமிழக முதல்வர் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். விதியை மீறி தவறு செய்பவர்கள் மீது போலீஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆன்லைன் பத்திரப்பதிவு மற்றும் பிற ஆவண பதிவு சேவைகள், மேலும் எளிமையாக்கப்பட்டு விரிவுபடுத்தப்படும். அடுத்தாண்டின் தொடக்கத்திற்குள், பத்திரப்பதிவு நடைமுறைகள் அனைத்தையும், காகிதமில்லா மின்னணு ஆவண பதிவு முறையாக மாற்ற முயற்சி நடந்து வருகிறது.

அதேபோல், மாதிரி பத்திரப்பதிவு மையம் அமைப்பதற்கான புதிய திட்டமும் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் போது, சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வெளியே வந்தபோது, அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், திடீரென நிலைதடுமாறி கீழே விழச்சென்றார். சுதாரித்துக்கொண்ட பாதுகாவலர்கள், அவரை உடனடியாக தாங்கி பிடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Source link