ஆப்பிளைத் தொடர்ந்து புளூபெர்ரி: காஷ்மீர் விவசாயத்தின் புதிய அடையாளம்

காஷ்மீரின் தோட்டக்கலைத் துறையில் தலைமுறைகளாக ஆப்பிள் பழங்களே முதன்மை வகித்து வருகின்றன. இருப்பினும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சில சோதனைகள், புளூபெர்ரி சாகுபடிக்கும் நல்ல வாய்ப்பு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. 

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன், ஷேர்-இ-காஷ்மீர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய சோதனைமுறைப் பயிரிடுதல் மூலம் மிகவும் ஊக்கமளிக்கும் முடிவுகள் கிடைத்துள்ளன. காஷ்மீரின் பிரதான பயிரான ஆப்பிளுக்குப் மாற்றாக இல்லாமல், அதற்குத் துணையாக, ஆப்பிள் வளர முடியாத அடிவாரப் பகுதிகள் மற்றும் சதுப்பு நிலங்களைப் பயன்படுத்தி புளூபெர்ரியைப் பயிரிட முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இது குறித்து ஷேர்-இ-காஷ்மீர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பழவியல்  துறைத் தலைவர் ஆஷாக் பண்டிட் கூறுகையில், “இந்தச் சோதனையின் முடிவுகள் வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன. பெர்ரிகளின் அளவும், சுவையும் நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக இருந்தன. இதை ஆப்பிளுக்கு மாற்றாகப் முன்வைப்பது எங்கள் நோக்கமல்ல; மாறாக ஆப்பிள் சாகுபடிக்குத் துணையாக இருக்கும் ஒரு பழமாகவே இதைப் பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

நல்ல வடிகால் வசதியுடைய, வண்டல் மற்றும் லேசான அமிலத்தன்மை கொண்ட மண் ஆப்பிள் சாகுபடிக்குத் தேவைப்படுகிறது. ஆனால் புளூபெர்ரி பழங்களுக்கு மலைப் பகுதிகள், ஓடைகளின் ஓரங்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் காணப்படுவது போன்ற அதிக அமிலத்தன்மை கொண்ட மண் தேவைப்படுகிறது. பி.எச் அளவு 3.5 முதல் 4.5 வரை உள்ள அதிக அமிலத்தன்மை கொண்ட மண்ணில் ஆப்பிள் மரங்கள் வளர முடியாது. ஆனால், குட்டையான புதர்ச் செடியான புளூபெர்ரி இத்தகைய மண்ணில் நன்கு வளரும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“நம்மிடம் மலை அடிவாரங்கள், ஓடைப் பகுதிகள் மற்றும் சதுப்பு நிலங்கள் எனப் பயன்டபடாத ஏராளமான நிலங்கள் உள்ளன. புளூபெர்ரி பயிரிடுவதன் மூலம் இந்த தரிசு நிலங்களை உற்பத்தித் திறன் கொண்ட நிலங்களாக மாற்ற முடியும். மேலும், புளூபெர்ரியை ‘க்ரோ பேக்’ முறையிலும் வளர்க்க முடியும் என்பதால், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் இவற்றை வளர்த்து, தேவைப்படும்போது பாதுகாப்பான இடங்களுக்கு எளிதாக மாற்றிக் கொள்ளவும் முடியும்” என்றும் பண்டிட் விளக்கியுள்ளார்.

புளூபெர்ரி சாகுபடி விவசாயிகளுக்கு அதிக லாபகரமானதாகவும் இருக்கும். ‘சூப்பர்ஃபுட்’ என்று பரவலாக அழைக்கப்படும் புளூபெர்ரியில் குறைந்த அளவிலான கலோரிகளும், அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நார்ப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இதன் காரணமாக சந்தையில் இதற்கு நல்ல விலை கிடைக்கிறது.

இந்தியாவில் புளூபெர்ரி ஒரு கிலோ தோராயமாக ரூ. 2,000 வரை விற்பனையாகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் சராசரியாக 3,200 புளூபெர்ரி செடிகளை நடவு செய்ய முடியும். ஒரு செடிக்குக் குறைந்தபட்சம் 2 கிலோ மகசூல் கிடைத்தாலும், ஒரு ஏக்கருக்கு 6,400 கிலோ பழங்கள் கிடைக்கும். புளூபெர்ரி ஒரு மதிப்புமிக்க பழம் என்பதால், விவசாயிக்குக் கிடைக்கும் விலை கிலோவுக்கு ரூ. 1,000 என மிகக் குறைவாகக் கணக்கிட்டால் கூட, ஒரு ஏக்கருக்கு ரூ. 64 லட்சமும் (அல்லது ஒரு கனால் நிலத்திற்கு ரூ. 8 லட்சமும்) வருமானம் ஈட்ட முடியும். இதில் பாதியளவு விலை கிடைத்தாலும்கூட இது மிகச் சிறந்த லாபத்தைத் தரும் என்று ஆஷாக் பண்டிட் கூறியுள்ளார்.

ஆப்பிள்களைப் போலன்றி, புளூபெர்ரி செடிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் என்பதால், மிகக் குறைந்த அளவிலேயே பூச்சிக்கொல்லிகள் தேவைப்படுகின்றன என்பது இதன் மற்றொரு நன்மையாகும். மேலும், புளூபெர்ரி செடிகளிலிருந்து மற்ற தாவரங்களுக்கு நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஏற்கனவே புளூபெர்ரி பயிரிடப்பட்டு வந்தாலும், காஷ்மீரின் காலநிலை இதன் இயல்பான வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் ‘பாலி-ஹவுஸ்’ எனப்படும் பசுமைக்குடில் சூழலில்தான் புளூபெர்ரியைப் பயிரிடுகிறார்கள். அங்கு விளையும் ரகங்களின் மரபியல் அமைப்பு வேறுபட்டது; சுவையும் குறைவாகவே இருக்கும். ஆனால் காஷ்மீரின் இயற்கை காலநிலையே இந்தப் பயிருக்கு மிகவும் உகந்ததாக உள்ளது என்று பண்டிட் குறிப்பிட்டுள்ளார்.

Source link