ஆப்ரிக்க கண்டத்தின் உண்மையான பரப்பை காட்டும் உலக வரைபடம்: ஐ.நா., தீர்மானத்துக்கு 164 நாடுகள் ஒப்புதல்

நியூயார்க்: ஆப்ரிக்க கண்டத்தின் உண்மையான பரப்பளவு எப்படி உள்ளதோ, அதற்கேற்ப பெரிதாக காட்டும் புதிய உலக வரைபடத்தை பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ஐ.நா., பொதுச்சபை ஏற்றது. இதற்கு, 164 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், அமெரிக்கா எதிர்த்தது.

உலக நாடுகளின் நிலப் பரப்பை இரு பரிமாண வரை படத்தில் காட்டுவதற்கு நீண்ட காலமாக, ‘மெர்கேட்டர்’ எனப்படும் வரைபட முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1569ல் பெல்ஜியத்தைச் சேர்ந்த வரைபட நிபுணர் ஜெரார்டஸ் மெர்கேட்டர் உருவாக்கிய இந்த முறை, கடல் வழி போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டது.

ஆனால், இந்த வரைபடத்தில் பூமியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளின் நிலப்பரப்பு, உண்மையான அளவை விட பெரிதாக தோன்றுகிறது.

இதனால், ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள கண்டங்கள் சிறியதாகவும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற வடக்கு பகுதிகள் பெரிதாகவும் தெரிகின்றன.

இந்த குறைபாட்டை சரிசெய்யும் வகையில், ‘ஈகுவல் எர்த்’ எனப்படும் புதிய வரைபட முறையை, 2018ல் வரைபட நிபுணர்கள் உருவாக்கினர். இந்த முறையில், கண்டங்களின் உண்மையான பரப்பளவுக்கு நெருக்கமான தோற்றம் கிடைக்கும் வகையில், உலக வரைபடம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதனால், ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, தெற்காசியா, ஓசியானியா ஆகியவை மெர்கேட்டர் வரைபடத்தை விட பெரிதாக தோன்றும்.

இந்த புதிய வரைபட முறையை மெர்கேட்டர் வரைபடத்துக்கு பதிலாக பயன்படுத்த வேண்டும் என, ஐ.நா., பொதுச்சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. புதிய உலக வரைபடத்தை ஆதரிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த ஓட்டெடுப்பில், 164 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆறு நாடுகள் நடுநிலை வகித்தன. புதிய தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ், மெர்கேட்டர் வரைபட முறையை கைவிடப் போவதாக அறிவித்துள்ளது.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் நோயல் பாரோ கூறுகையில், “வரைபடத்தை மாற்றுவதால் உலகம் மாறிவிடாது. ஆனால், தவறான பிரதிநிதித்துவத்தை சரிசெய்வது உண்மையை நிலைநாட்டும் நடவடிக்கையாகும்,” என்றார்.

இந்தியா ஆதரவு

ஐ.நா., புதிய உலக வரைபட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தது. “கண்டங்களின் உண்மையான பரப்பளவை பிரதிபலிக்கும், ‘ஈகுவல் எர்த்’ வரைபட முறைகளை பொதுவாக ஆதரிப்பதே இந்தியாவின் நிலைப்பாடு,” என, ஐ.நா., வுக்கான இந்திய பிரதிநிதி ரகு பூரி தெரிவித்தார்.

Source link