ஆமதாபாத், சூரத் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இ மெயில் குறித்து போலீசார் விசாரணை

ஆமதாபாத்: ஆமதாபாத், சூரத் நீதிமன்றங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற வளாகங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஆமதாபாதில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் வெடி வைத்து தகர்க்க போவதாக இ மெயில் வழியாக மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மிரட்டலில் கீகாந்தாவில் உள்ள பெருநகர நீதிமன்றம், லால்தர்வாஜா அமர்வு நீதிமன்றம் உள்பட ஆமதாபாதில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மிரட்டல் இ மெயில் பற்றிய விவரம் அறிந்த போலீசார், உடனடியாக பல்வேறு குழுக்களாக பிரிந்து விசாரணையை தொடங்கினர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர் வரவழைக்கப்பட்டு, நீதிமன்ற வளாகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

சந்தேகத்துக்கிடமாக பொருட்கள் ஏதேனும் தென்பட்டதா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தீவிர தேடுதல் வேட்டையில் எந்த நீதிமன்றத்திலும் எவ்வித வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், விழிப்புடன் இருக்குமாறு நீதிமன்ற ஊழியர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்.’ அண்மைக்காலமாக, பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களை குறி வைத்து இது போன்ற வெடிகுண்டு மிரட்டல் இ மெயில்கள் வருவது அதிகரித்து உள்ளன. அந்த குறிப்பிட்ட இ மெயில் பற்றிய முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன’ என்றனர்.

Source link