ஆயிரம் சந்தேகங்கள்: மியூச்சுவல் பண்டு என்எப்ஓ வில் முதலீடு செய்யலாமா?

மியூச்சுவல் பண்டு என்.எப்.ஓ., வரும்போதெல்லாம், என் புரோக்கர் அலுவலகத்தில் இருந்து அழைத்து, ‘பத்து ரூபாய் விலையில் என்.எப்.ஓ. வருது சார்.. வாங்குங்க’ என்று சொல்வர். அப்படியானால், என்.ஏ.வி. அதிகமாக இருந்தால், அதை வாங்க கூடாதா?

ஜானகிராமன், பொழிச்சலுார்

அவர்கள் என்.எப்.ஓ.,வை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக அப்படி சொல்கிறார்கள். மியூச்சுவல் பண்டு என்.ஏ.வி.,யையும், பங்குகளின் விலையையும் ஒன்று போல் கருத வைத்து, குறைந்த விலையில் கிடைக்கிறது என்ற மாய தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள்.

மியூச்சுவல் பண்டு திட்டங்களும், பங்குகளின் விலைகளும் ஒன்றல்ல. பங்குகளில் தான் குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்ற பாலபாடம் சொல்லித்தரப்படும்.

ஆனால், மியூச்சுவல் பண்டுகள், என்.ஏ.வி., என்பது அந்த திட்டத்தில் உள்ள மொத்த சொத்துகளை, எத்தனை யூனிட்டுகள் உண்டோ, அதனால் வகுக்கப்பட்டு, நெட் அசெட் வேல்யூ விபரம் தினமும் வெளியிடப்படும்.

இங்கே 10 ரூபாய் என்.ஏ.வி.,யும், 1,000 ரூபாய் என்.ஏ.வி.,யும் ஒன்று தான். உதாரணமாக, இரண்டு திட்டங்களும் ஆண்டொன்றுக்கு 12 சதவீத ரிட்டர்ன் கொடுக்கிறது என்று கருதுவோம். 10 ரூபாய் 11.20 ரூபாயாக உயரும். 1,000 ரூபாய், 1,120 ரூபாயாக உயரும். இரண்டிலும், ஒரே வளர்ச்சி தான்.

என்.ஏ.வி., அதிகமாக இருப்பதற்கு காரணம், அந்த பண்டு திட்டம் பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கிறது, தொடர்ச்சியான உள்ளார்ந்த சொத்துகளின் மதிப்பு கணிசமாக உயர்ந்திருக்கிறது என்பதே. புதிய திட்டங்கள் தான் 10 ரூபாய் விலையில் கிடைக்கும். அவற்றில் இனிமேல் தான் சொத்துக்களை வாங்கி சேர்க்க போகிறார்கள்.

முதலீட்டாளராக நீங்கள் கவனிக்க வேண்டியது, ஒரு குறிப்பிட்ட பிரிவில் எந்த பண்டு, தொடர்ச்சியாக அதன் பெஞ்ச்மார்க்கை விட கூடுதல் லாபம் ஈட்டியிருக்கிறது, அதன் ‘எக்ஸ்பென்ஸ் ரேஷியோ’ எனப்படும் செலவினங்கள் குறைவாக இருக்கிறதா, அதன் நிர்வாகம் வலுவாக இருக்கிறதா என்பவற்றையே.

நான் பல்வேறு காரணங்களை ஒட்டி பல இடங்களில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஏற்கனவே ஒரு பர்சனல் லோனும், ஒரு டூ வீலர் லோனும் இருக்கின்றன. இன்னும் கூடுதல் லோன் வாங்கலாமா?

ஜெ. லோகநாதன், மாயவரம்

கூடுதல் எண்ணிக்கையிலான கடன்கள் என்றால் கூடுதல் தலைவலி என்று அர்த்தம். நான்கைந்து லோன்கள் வைத்திருந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேதியில் மாதாந்திர தவணை வருகிறது என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொன்றுக்கும் பணம் தேற்றுவதற்குள் உங்களுக்கு விழி பிதுங்கிவிடாதா? அவற்றில் ஏதேனும் ஒன்று தாமதம் ஆனாலோ அல்லது விடுபட்டாலோ, அதன் பின்விளைவுகள் மோசமானவை. வட்டிக்கு மேல் வட்டி போட்டு, கடன் பல்கி பெருகுவது ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் கடனை முறையாக திருப்பிச் செலுத்தாதது உங்கள் கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கலாம்.

அதிகபட்சம் இரண்டு கடன்களுக்கு மேல் வைத்துக்கொள்ளாதீர்கள். இரண்டே அதிகம் என்று சொல்வேன். கடனே இல்லாமல் இருப்பது தான் சாலச்சிறந்தது. முடியாதபோது, அத்தியாவசியமான ஒரு தேவைக்காக ஏதேனும் ஒரு கடன் வாங்கலாம். அந்த கடனை அடைத்துவிட்டு, அடுத்த கடனுக்கு போவது தான் நல்லது. கணக்கு போட்டு செலவழிப்பதற்கு அது தான் உகந்த வழி.

எனக்கு வயது 60. சமீபத்தில் என் மனைவியும் தந்தையும் இறந்துவிட்டனர். எனக்கு வாரிசு இல்லை. தந்தை பெயரில் வைப்பு நிதி உள்ளது. அது ‘இ ஆர் எஸ்’ ஆக தான் உள்ளது. இப்போது அதை என் பெயருக்கு மாற்றும்போது நாமினி போட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். எனக்கு சொந்தபந்தம் யாரும் இல்லை. இந்த சூழ்நிலையில் வைப்பு நிதி போட்டு, மாத வட்டி பெற்று என்னுடைய இறுதிக்கால வாழ்க்கையை தள்ள முடியுமா, என்ன செய்வது?

எஸ்.சிவராமன், மதுரை-.

வங்கிகள் நாமினி போட்டுத்தான் ஆகவேண்டும் என்று வலியுறுத்த முடியாது. வங்கி கணக்கு அல்லது வைப்பு நிதி துவங்கும்போது, நாமினி விபரம் பதிவு செய்வது என்பது ‘விருப்பத் தேர்வு’ (ஆப்ஷனல்) என்று தான் ஆர்.பி.ஐ. விதிகள் சொல்கின்றன. உங்களுக்கு நாமினி போட விருப்பமில்லை என்றால், வங்கியிடம் அதற்கான ‘ஆப்ட்-அவுட்’ படிவத்தை கேட்டு வாங்கி, அதில் கையெழுத்திட்டு கொடுத்து விடலாம். அதன் பின் வைப்பு நிதியாக போட்டுக்கொள்ளலாம். உங்களுக்கு 60 வயது ஆகிவிட்டதால், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் பணத்தை போடலாம். சாதாரண வைப்பு நிதி வட்டியை விட, தற்போது இதற்கு 8.20 சதவீத வட்டி கிடைக்கும்.

நான் ‘இ.பி.எஸ்., 95’ ஓய்வு ஊதியம் பெறுபவன். மஹாராஷ்டிரா மின் வாரியத்தில் பணியாற்றினேன். 2005ல் 3 பாகங்கள் ஆக டிரைபர்கேஷன் நடந்தது. சி.பி.எப். டிரஸ்ட் எக்ஸெம்ப்டட் ஸ்டேடஸில் இருந்து விலக்கு ஆனது. இப்போது 2026ல் இ.பி.எப்.ஓ., டிரஸ்ட்டை எடுத்து கொண்டது. ஆப்ஷன் கொடுக்கவில்லை. 2012ல் ஓய்வு பெற்றேன். எல்லோருக்கும் கிடைக்கும் உயர்வு ஓய்வூதியம் பெற உங்கள் ஆலோசனை தேவை. நுகர்வோர் நீதிமன்றம் வாயிலாக கிடைக்க வாய்ப்பு உள்ளதா?

சுந்தர் நடராஜன், மின்னஞ்சல்

உங்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் கிடைக்க வாய்ப்பில்லை. செப்டம்பர் 1, 2014க்கு முன்னதாக ஓய்வு பெற்றவர்களில், அப்போது பணியில் இருந்தபோது, அதிக ஓய்வூதியத்துக்கான ‘ஜாயின்ட் ஆப்ஷன்’ கொடுத்திருக்க வேண்டும். நீங்கள் 2012லேயே ஓய்வு பெற்றுவிட்டீர்கள்; மேலும் அந்த ஆப்ஷனையும் கொடுக்கவில்லை. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து வழங்கப்பட்ட அதிக ஓய்வூதியத்துக்கான வாய்ப்பு உங்களுக்கு பொருந்தாது. மஹாராஷ்டிரா மின் வாரியத்தின் பி.எப்., டிரஸ்ட் பின்னர் எக்ஸெம்ப்டட் நிலையிலிருந்து வெளியேறி, இப்போது இ.பி.எப்.ஓ., நிர்வாகத்துக்கு வந்திருப்பது மட்டும் இந்த தகுதியை மாற்றாது.

மேலும், இந்த விவகாரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் தீர்வு காண வேண்டிய பிரச்னை அல்ல. எனவே, நுகர்வோர் நீதிமன்றம் வாயிலாக அதிக ஓய்வூதியம் பெறலாம் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ—மெயில்’ மற்றும் ‘வாட்ஸாப்’ வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்

pattamvenkatesh@gmail.com ph: 98410 53881

Source link