“ஆற்றில் நுரை பொங்க சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம்” – அமைச்சர் ராஜீவ் பேச்சால் சர்ச்சை!

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் நேற்று (27-10-26) திருப்பூர் காசிப்பாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. சாய ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைக் காலங்களில் தண்ணீர் மேலிருந்து கீழே விழும்போது இயல்பாகவே ஆற்றில் நுரை பொங்கும். அது மட்டுமல்லாமல், மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு கலப்பதால் அதிகளவில் நுரை ஏற்படுகிறது. மழையைப் பயன்படுத்திக் கொண்டு சாயப் பட்டறைகள் மற்றும் ஜவுளித் தொழிற்சாலைகளில் இருந்து ரசாயனக் கழிவுகளை சுத்திகரிக்காமல் ஆற்றில் திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

சோப்பு, ஷாம்பு கலப்பதால் ஆற்றில் நுரை பொங்குவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம் அளித்திருப்பது தற்போது தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையாக மாறியுள்ளது. இவரின் பேச்சுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சர்ச்சைப் பேச்சுக்கு அமைச்சர் ராஜீவ் விளக்கம் அளித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கழிவுநீரில் இருக்கிற வேதிப்பொருட்கள், சலவைப்பொருட்கள், பாஸ்பரஸ் ஆகிய பொருட்களின் ஆகிய காரணத்தால் நுரை ஏற்படும். கழிவுநீர் என்றால் நமது வீட்டில் உபயோகப்படுத்தும் சாக்கடை தண்ணீர் தான். இந்த மூன்றுமே நுரை ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. தொழில்துறை கழிவால் அந்த நுரை ஏற்படவில்லை என்று தான் கூறினேன். திருப்பூரில் நான் பேசிய முழு வீடியோவையும் பாருங்கள்” என்று கூறினார்.