ஆஸி., அணி ரன் குவிப்பு: தென் ஆப்ரிக்க பவுலர்கள் ஏமாற்றம்

கேப்டவுன்: கேப்டவுன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் மாட் ரென்ஷா, கிரீன், இங்லிஸ் அரைசதம் அடித்தனர்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் தொடர் 1–1 என சமனில் உள்ளது. மூன்றாவது, கடைசி டெஸ்ட், நேற்று கேப்டவுனில் நடக்கிறது. முதல் நாளில், முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 329/10 ரன் எடுத்தது.

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு முதல் இரு டெஸ்டில் ‘மிடில் ஆர்டரில்’ களமிறங்கிய மாட் ரென்ஷா, இம்முறை டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து நல்ல துவக்கம் தந்தார்.

போட்டியின் 18 வது ஓவரில் பந்தை சுழற்றினார் ஹார்மர். முதல் பந்தில் ஹெட்டை (41) போல்டாக்கினார். கடைசி பந்தில் லபுசேனை ‘டக்’ அவுட்டாக்கினார் (58/2). மறுபக்கம், ரென்ஷா அரைசதம் அடித்தார். இவருக்கு கைகொடுத்த கேமரான் கிரீன், தன் பங்கிற்கு அரைசதம் எட்டினார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு 126 ரன் சேர்த்த நிலையில், யான்சென் ‘வேகத்தில்’ ரென்ஷா (74) வெளியேறினார். அடுத்த சில நிமிடத்தில் கிரீனையும் (65) திருப்பி அனுப்பினார் யான்சென். பின் வந்த இங்லிஸ், அலெக்ஸ் கேரி ஜோடி அவுட்டாகாமல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இங்லிஸ் அரைசதம் கடந்தார். இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 324/4 ரன் எடுத்து, 5 ரன் மட்டும் பின்தங்கி இருந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் ஹார்மர், யான்சென் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

Source link