இசக்கி சுப்பையாவை விரட்டியடித்த மக்கள்.. தவெகவில் சேர்ந்த அதிமுக மாஜி எம்எல்ஏவிற்கு நேர்ந்த கதி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இரவு நேரத்தில் ஏற்பட்ட மின்வெட்டால் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த சமயத்தில் அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா பொதுமக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இசக்கி சுப்பையா மிரட்டுவது போல் சைகை காண்பித்ததால் கொதித்துப்போன மக்கள் ‘ஓடு.. ஓடு..’ என்று கூறி அங்கிருந்து விரட்டினர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதியில் கடந்த 2011, 2021, 2026 என்று 3 முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இசக்கி சுப்பையா. சமீபத்தில் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார்.

இசக்கி சுப்பையாவிற்கு தவெகவில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

எம்எல்ஏ பதவியை இசக்கி சுப்பையா ராஜினாமா செய்ததால் தற்போது அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதி காலியாக உள்ளது. விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தவெக சார்பில் களமிறங்க இசக்கி சுப்பையாக தயாராகி வருகிறார். இந்நிலையில் தான் அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட மின்வெட்டு பிரச்சனையால் இசக்கி சுப்பையாவை பொதுமக்கள் விரட்டியடித்த சம்பவம் நடந்துள்ளது.

அதாவது முதலியார்பட்டி, கோட்டைவிளைப்பட்டி, அகஸ்தியர்புரம் உள்ளிட்ட கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவிலும் நீண்டநேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளும் தவெக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதுபற்றி அறிந்தவுடன் முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா சம்பவ இடத்துக்கு வந்தார்.

பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட்டு செல்லும்படி கூறினார். ஆனால் பொதுமக்கள் கேட்கவில்லை. இசக்கி சுப்பையாவிடம் வாக்குவாதம் செய்தனர். திரும்பி போ.. திரும்பி போ.. என்று கோஷமிட்டனர். ஆனால் இசக்கி சுப்பையா போராட்டக்காரர்களை நோக்கி மிரட்டும் தொனியில் சைகை காண்பித்தார்.

இதனால் கொந்தளித்த மக்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது ஒருவர், ”உங்களை நம்பி ஓட்டுப்போட்டதற்கு வேறு கட்சிக்கு சென்று விட்டீர்கள். வேறு கட்சிக்கு சென்றதாலேயே இப்படி பேச வேண்டாம். உங்களை நாங்கள் யாரும் அழைக்கவில்லை. எங்கள் பிரச்சனையை நாங்களே பார்த்து கொள்கிறோம். இங்கிருந்து ஓடி விடுங்கள்” என்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அனைவரும் ஓடு ஓடு என்று இசக்கி சுப்பையாவை நோக்கி கோஷமிட்டனர். இதனால் வேறு வழியின்றி இசக்கி சுப்பையா அங்கிருந்து வெளியேறினார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.